ஆரோன் பின்ச் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் சாதனைகளால் நினைவு கூரப்படக்கூடிய வீரர் கிடையாது. ஆனால் ஆஸ்திரேலிய அணி ஸ்மித், வார்னர் ஆகிய முக்கிய வீரர்களை பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இழந்து நின்ற போது, வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியை இழுத்துப் பிடித்து வைத்திருந்த ஒரு தலைமைப் பொறியாளர் என்றே கூறலாம்!
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மகாண வீரரான 35 வயதான இவர் முதன் முதலில் ஆஸ்திரேலிய அணிக்காகச் சர்வதேச போட்டியில் அறிமுகமானது 2011 இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில்தான். பந்துவீச்சாளர், ஆடுகளம் எது குறித்தும் அலட்டிக்கொள்ளாமல் அதிரடியாய் ஆடுவதில் வல்லவர். சர்வதேச டி20 போட்டியில் 158 ரன்களை இங்கிலாந்திற்கு எதிராகக் குவித்து அசத்தி இருக்கிறார்.
2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் இவரை ஒருநாள் போட்டியிலும் இலங்கைக்கு எதிராக அறிமுகப்படுத்தியது. 2018ஆம் ஆண்டு ஸ்மித், வார்னர் இல்லாத நிலையில் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானிற்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமானார்.
2018ஆம் ஆண்டு ஸ்மித், வார்னர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு வருடம் தடைபெற்ற போது, ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் யூனிட்டின் பலம் பெரிதாய் சரிந்தது. இந்தக் காலக்கட்டத்தில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அதிகபட்ச ஒருநாள் போட்டி ரன்களை பதிவு செய்தது. ஆனால் ஒரு கேப்டனாக ஆரோன் பின்ச் ஆஸ்திரேலிய அணியை நம்பிக்கோயோடே வழிநடத்தி, கடினமான காலக்கட்டங்களைக் கடத்தி கூட்டிவந்தார். இதுதான் கடந்த ஆண்டு அவர் தலைமையில் டி20 உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய அணி உயர்த்த முக்கியக் காரணம் என்றே சொல்லலாம்.
வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிற்கான பேட்ஸ்மேனாக ஆஸ்திரேலிய அணிக்குள் வந்த ஆரோன் பின்ஞ் ஓய்வு குறித்த சூசகமான தகவலை கூறியிருக்கிறார். அதில் ஆரோன் பின்ச் “எல்லாவற்றுக்கும் முடிவு உண்டு. இந்த வகையில் நான் உட்பட, வார்னர் வரை டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறலாம். 30 வயதின் மத்திமத்திற்கு வரும்போது இது நடப்பது இயல்பான ஒன்றுதான். ஆனால் வார்னர் தொடர்ந்து போகிறார். அவர் இன்னும் பத்து வருடத்திற்குக் கூட விளையாடலாம். அந்தளவிற்கான உடல்தகுதியோடு விளையாட்டை விரும்பி விளையாடி, அவர் தனக்குத்தானே சவால் அளித்துக்கொள்கிறார். டி20 கிரிக்கெட் போட்டி வடிவம் மூர்க்கமானது. கடந்த உலகக்கோப்பையில் புள்ளிகள் பெற்றும், ரன்ரேட் இல்லாததால் செளத் ஆப்பிரிக்கா வெளியேறியது. ஒரு ஓவரில் எல்லாம் மாறுகிறது. இது மிகக் கடினமான போட்டியாகவே இருக்கும்” என்று கூறியுள்ளார்!