ஓய்வு பெறுகிறார் ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பின்ச்! “ஆனால் ஒரு கண்டிஷன்”!!

0
568

ஞாயிற்றுக்கிழமை கெய்ர்ன்ஸில் நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டிக்குப் பிறகு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆரோன் பின்ச் அறிவித்துள்ளார். அடுத்த மாதம் உலகக் கோப்பை துவங்கிவிடும் என்பதால் டி20 அணிக்கு மட்டும் அவர் தொடர்ந்து கேப்டனாக இருப்பார்.

ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் மிகவும் மோசமான தருணத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார். 2022 ஆம் ஆண்டு அவருக்கு மறக்கக்கூடிய ஆண்டாக இதுவரை இருந்திருக்கிறது. 13 போட்டிகளில் விளையாடிய அவர் 169 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார். கடைசியாக நடந்த 12 இன்னிங்சில் ஐந்து முறை டக் அவுட் ஆகியுள்ளார். குறிப்பாக நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது டக் அவுட் ஆனார்.

- Advertisement -

நியூசிலாந்து உடன் நடக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு பிறகு சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆரோன் பின்ச் முடிவெடுத்திருக்கிறார். இது குறித்து ஆரோன் பின்ச் தெரிவிக்கையில், “இந்த பயணத்தில் பல மறக்க முடியாத நினைவுகள் இருக்கின்றன. இத்தனை ஆண்டுகள் திறமையான அணியில் விளையாடியதை பெருமிதமாக கருதுகிறேன். மேலும் பல ஜாம்பவான்களுடன் நான் பயணித்திருப்பதை ஆசிர்வாதமாகவும் கருதுகிறேன். நான் சரியான தருணத்தில் இந்த ஓய்வு முடிவை எடுத்திருக்கிறேன். ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பைக்கு புதிய கேப்டனை நியமிக்க இதுதான் சரியான தருணம். மேலும் இந்த தருணத்தில் நான் நிறைய நண்பர்களுக்கும் உதவியாளர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.” என்று குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் ஆரோன் பின்ச், கடைசியாக ஒருமுறை தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா அணியை வழிநடத்தி உலககோப்பையை வெல்வதற்கு இது சரியான வாய்ப்பாக இருக்கும்.

“டி20 உலக கோப்பை தொடருக்கு பிறகு வரவிருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் நான் விளையாட முயற்சிக்கலாம். காலில் ஏற்பட்டுள்ள காயத்தால் நீண்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் முழுமையாக விளையாட முடியாது. அது எனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு மேலும் ஒரு தவறான முடிவாக சென்று முடியலாம். இன்னும் சில ஆண்டுகள் விளையாட வேண்டும் என்று என் சுய நலத்திற்காக நான் அப்படி செய்யமாட்டேன். இப்போது எடுத்திருப்பது சரியான முடிவு. எனக்கு பிறகு யார் துவக்க வீரர்களாக களமிறங்கினாலும், யார் ஆஸ்திரேலியா அணியை வழிநடத்தினாலும் அது 2023 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை தொடரில் வெல்வதற்கு மிக சிறப்பான வாய்ப்பாக அமையும். டி20 போட்டிகளில் நான் நல்ல பார்மில் இருப்பதாக உணர்கிறேன். முற்றிலும் மாறுபட்ட கிரிக்கெட் வடிவமாக டி20 போட்டிகள் இருக்கிறது. நான் அதில் விளையாடுவதற்கு மிகவும் இயல்பாக உணர்கிறேன். இன்னும் எதிர்பார்த்த அளவிற்கு ரன்கள் அடிக்கவில்லை. டி20 போட்டிகளை பொருத்தவரை சரியான ரிஸ்க் எடுப்பது பொறுத்து ஆட்டம் அமையும்.” என்றார்.

- Advertisement -

டி20 உலக கோப்பை தொடர் முடிவுற்ற பிறகு, ஆஸ்திரேலியா அணிக்கு அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரை எந்தவித சர்வதேச டி20 போட்டிகளும் இல்லை. அந்த நேரத்தில் பிக் பாஸ் லீக்கில் மெல்போன் அணிக்காக விளையாடப் போவதாகவும் தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு உலககோப்பை வென்ற ஆஸ்திரேலியா அணியில் இடம் பெற்றிருந்த ஆரோன் பின்ச், சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இதுவரை 5400 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 17 சதங்கள் அடங்கும். ஆஸ்திரேலியா அணிக்கு ஒருநாள் போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சதங்களில் முதல் ஐந்து இடங்களுக்குள் இது இருக்கிறது. ரிக்கி பாண்டிங், வார்னர், மார்க் வாக் ஆகியோருக்கு அடுத்தபடியாக ஆரோன் பின்ச் இருக்கிறார்.

2013 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான ஆரோன் பின்ச் அதிகபட்சமாக ஒரு இன்னிங்ஸில் 153 ரன்கள் விளாசி இருக்கிறார். இவரது ஒரு நாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 2019 ஆம் ஆண்டு மிகச்சிறப்பாக அமைந்தது அந்த ஆண்டில் நான்கு சதங்கள் உட்பட 1141 ரன்களை ஒரு நாள் போட்டிகளில் அடித்திருந்தார்.

2018 ஆம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்காக ஆஸ்திரேலியா அணி பெரும் சர்ச்சைகளை சந்தித்தது. டேவிட் வார்னர், ஸ்மித் ஆகிய இரு முன்னணி வீரர்கள் இரண்டு வருடங்கள் தடை செய்யப்பட்டனர். அப்போது வெள்ளைப் பந்து போட்டிகளின் நிரந்தர கேப்டனாக ஆரோன் பின்ச் நியமிக்கப்பட்டார். கேப்டன் பொறுப்பிலும் மிகச் சிறப்பாக அவர் செயல்பட்டு வந்திருக்கிறார். டி20 உலக கோப்பை தொடர் முடிவுற்ற பிறகு, டி20 போட்டிகளில் இவரது கேப்டன் பரப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்று வேறு சில தகவல்களும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.