வரவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடருக்காக கேப்டன் சுப்மன் கில் மற்றும் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோர் வாஷிங்டன் சுந்தரை அணியில் சேர்க்க விரும்பிய நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இடைக்கால பயிற்சியாளரான விவிஎஸ் லக்ஷ்மன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி ஒரே நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும், ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் விளையாட உள்ளதால் அணித் தேர்வில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிக அளவில் இடதுகை பேட்ஸ்மேன்கள் இருப்பதால், அவர்களுக்கு எதிராக ஆஃப் ஸ்பின்னரான வாஷிங்டன் சுந்தர் பந்துவீசினால் சாதகமாக இருக்கும் என கில் மற்றும் கம்பீர் கருதியுள்ளனர்.
இதுகுறித்து கிரிக்கெட் வட்டாரங்களில் கூறும்போது “ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியில் நேபாளம் போன்ற அணிகளிலும் இடதுகை பேட்ஸ்மேன்கள் அதிகம் உள்ளனர். அதனால் லக்ஷ்மன் தனது டீமுக்கு கூடுதல் ஸ்பின்னராக வாஷிங்டன் சுந்தர் கண்டிப்பாக தேவை என்பதில் உறுதியாக இருந்து சுந்தரைத் தர மறுத்துவிட்டார். இந்த விவாதத்தில் லக்ஷ்மனின் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டதால், சுந்தர் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான அணியிலேயே நீடிக்கிறார். இதனால் கம்பீரின் ஆல்ரவுண்டர் தேவையைப் பூர்த்தி செய்ய நிதீஷ் குமார் ரெட்டி வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டார்” என்று கூறி இருக்கிறார்கள்.