“இன்று இந்திய அணியில் இடம்.. அன்று மகி பாய் சொன்ன வார்த்தைகள்” – துருவ் ஜுரல் பேட்டி

0
157
Jurel

இந்த மாதம் இந்தியா வரும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. ஜனவரி 25ஆம் தேதி ஹைதராபாத் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

இந்தத் தொடருக்கான இந்திய அணியில் ஆச்சரியப்படத்தக்க தேர்வாக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான வலது கை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் துருவ் ஜுரல் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

இவர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதி கொண்டுவரப்பட்ட காரணத்தினால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

முதல் ஆட்டத்திலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 15 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அந்தப் போட்டிக்குப் பிறகு அவர் மகேந்திர சிங் தோனியுடன் பேசும் வாய்ப்பையும் பெற்றார். மேலும் இவர் மகேந்திர சிங் தோனியின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய அணியின் வாய்ப்பு பற்றியும் மகேந்திர சிங் தோனி பற்றியும் பேசி உள்ள துருவ் ஜுரல் “என் பெயரை அணியில் பார்த்ததும் நான் உண்மையில் அதிர்ச்சி அடைந்தேன். இங்கு கிரிக்கெட் விளையாடுவோம் ஒவ்வொரு குழந்தையுடைய கனவு இது. நான் அப்பொழுது எங்கே இருக்கிறேன் என்று கூட உணர முடியவில்லை. அது ஒரு கனவு போல இருந்தது.

- Advertisement -

நான் தோனி பாயின் மிகத் தீவிரமான ரசிகன்.கடந்த ஆண்டு அவருடன் பேசும் வாய்ப்பு கிடைத்த பொழுது, அவர் பேட்டிங் செய்யும்பொழுது அவருடைய மனநிலை என்னவாக இருக்கிறது என்பது குறித்து நான் பேசினேன்.

அப்பொழுது அவர் என்னிடம் ‘எப்பொழுதும் அடுத்த பந்தில் கவனம் செலுத்துங்கள் வேறு எதைப் பற்றியும் யோசிக்க வேண்டாம். பெரும்பாலான அழுத்தம் நமக்குள் இருந்துதான் வருகிறது’ என்று கூறினார். விசூவலைஸ் செய்து, எனது தயாரிப்பில் கவனம் செலுத்தி, விளையாடும் பொழுது பந்தை பார்த்து விளையாடச் சொன்னார். மேலும் அவர் ‘ நான் ஏற்கனவே இவ்வளவு செய்து விட்டேன் அதனால் தான் இங்கே இருக்கிறேன்’ என்று கூறினார்.

மேலும் நீங்கள் எப்பொழுதும் உங்களைச் சந்தேகப்படக் கூடாது. முடிவு எப்படி வருகிறது என்பது குறித்து யோசிக்க கூடாது. என்ன செய்ய வேண்டுமோ அந்த செயல்பாட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் அவர் தெரிவித்தார். இது எனக்கு பெரிய உதவியாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.