இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் 5 டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்காத தொடக்க ஆட்டக்காரர் அபிமன்யு ஈஸ்வரன் குறித்து அவரது தந்தை ரங்கநாதன் ஈஸ்வரன் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
அணியில் வாய்ப்பு இல்லை
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் ஓய்வு பெற்ற நிலையில் அவர்களது இடத்தை நிரப்பும் விதமாக கருண் நாயர் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற்றனர். இவர்கள் இருவரும் பல இரண்டு போட்டிகள் விளையாட வாய்ப்பு கிடைத்தும் அதில் பெரிய அளவில் தங்களது பங்களிப்பை வெளிப்படுத்தவில்லை. இந்த சூழ்நிலையில் நேற்று முதல் தொடங்கிய ஐந்தாவது போட்டியிலும் இவர்கள் இருவருக்கே வாய்ப்பு கிடைத்தது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியில் சில ஆண்டுகளாக 15 பேர் கொண்ட குழுவில் இடம் கிடைக்கும் அபிமன்யு ஈஸ்வரன் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெற முடியாமல் போராடி வருகிறார்.
அதிலும் குறிப்பாக இந்திய உள்நாட்டு தொடர்களில் சிறப்பாக விளையாடி தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய காரணத்தால் மட்டுமே அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது. இந்த சூழ்நிலையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சாய் சுதர்சன் மற்றும் கருண் நாயர் ஆகியோர் இடம் பெற்று விளையாடியதன் விளைவாக இந்திய டெஸ்ட் அணியில் இவர்கள் இருவருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்று அபிமன்யு ஈஸ்வரனின் தந்தை ரங்கநாதன் ஈஸ்வரன் மறைமுகமாக சுட்டிக்காட்டி பேசி இருக்கிறார். மேலும் அதற்கான விளக்கத்தையும் அவரே கூறி இருக்கிறார்.
இன்னும் காத்துக் கொண்டிருக்கிறார்
இதுகுறித்து அவர் கூறும் போது “அபிமன்யு ஈஸ்வரன் தனது டெஸ்ட் அறிமுகத்திற்காக இன்னும் எத்தனை நாட்கள் காத்திருக்கிறார் என்பதை நான் கணக்கிடவில்லை. நான் ஆண்டுகளை எண்ணுகிறேன். இப்போது வரை மூன்று ஆண்டுகள் ஆகின்றன. ஒரு வீரரின் வேலை என்ன ரன்கள் எடுப்பதுதான். அதனை அவர் சரியாக செய்திருக்கிறார். அவர் கடந்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது இரண்டு இந்திய ஏ போட்டிகளில் சிறப்பாக செயல்படவில்லை என்றும், அதனால் அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை என்று மக்கள் கூறுகின்றனர். ஆனால் அபிமன்யு பிஜிடிக்கு முன்பு விளையாடிய காலகட்டத்தில் கருண் நாயர் இல்லை. துலீப் டிராபி அல்லது இரானி கோப்பைக்கு கருண் நாயர் இல்லை.
இதையும் படிங்க:எப்படி ஜெயிக்கிறதுனு கம்பீர் மறக்கக்கூடாது.. பல வருஷமா எல்லாரும் செய்யறத பாருங்க – கங்குலி அறிவுரை
கடந்த ஆண்டு முதல் நடப்பு ஆண்டு வரையிலான காலகட்டத்தை நீங்கள் எடுத்துக் கொண்டால் அபிமன்யு 864 ரன்கள் நெருங்கி அடித்தார். பிறகு எப்படி ஒப்பிடுகிறார்கள் என்று புரியவில்லை. கருண் நாயருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார்கள். அவர் 800-க்கும் அதிகமான ரன்கள் அடித்தார். தேர்வாளர்கள் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். என் மகன் கொஞ்சம் மனசோர்வடைந்ததாக தெரிகிறது. சில வீரர்கள் ஐபிஎல் செயல் திறனை கருத்தில் கொண்டு நேரடியாக வாய்ப்பினை கைப்பற்றுகிறார்கள். இது அவர்களுக்கு டெஸ்ட் அணியில் இடம் பெற உதவுகிறது. மிக நீண்ட வடிவத்திற்கான அணியை தேர்ந்தெடுக்கும் போது ஐபிஎல் தொடரை கணக்கிட கூடாது. இந்திய உள்நாட்டுத் தொடர்கள் டெஸ்ட் தேர்வுக்கு அடிப்படையாக இருக்க வேண்டும்” என்று அவர் பேசி இருக்கிறார்.






