இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு தராதது குறித்து இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று ஐந்தாவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியிலும் டாஸ் தோற்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. மழைக்கு நடுவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்திருக்கிறது.
ஸ்பின்னர் இல்லாமல் முடியாது
இதுகுறித்து கங்குலி கூறும் பொழுது “ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளத்தில் புல் இருக்கிறது. இங்கிலாந்து வேண்டுமென்றே இவ்வாறு செய்திருக்கிறது. அவர்கள் நான்கு வேகப் பந்துவீச்சாளர்களுடன் செல்வார்கள். கடந்த காலத்தில் இந்திய அணியில் அஸ்வின் மற்றும் ஜடேஜா கூட்டணி சிறப்பாக இருந்தது. இந்த தொடரில் குல்தீப் யாதவ் விளையாடி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். முதன்மை சுழல் பந்துவீச்சாளர் இல்லாமல் ஐந்தாவது நாளில் ஒரு அணியை வீழ்த்துவது கடினம்”
“கடந்த போட்டியில் இந்தியா பேட்டிங் செய்த பொழுது என்ன நடந்தது என்று பார்த்தோம். இங்கிலாந்திடம் தரமான சுழல் பந்துவீச்சாளர் இல்லை. எனவே அவர்களால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. கடந்த காலங்களில் வார்னே, முரளிதரன், கும்ப்ளே மற்றும் ஹர்பஜன்சிங் போன்ற சிறந்த ஸ்பின்னர்கள் இருந்தார்கள். இந்த வகையில் குல்தீப் யாதவ் எதிர்காலத்திற்கு மிகவும் சிறந்தவர்”
ஒரு போட்டியில் முடிவு செய்யாதீர்கள்
“காம்போஜை ஒரு போட்டியில் மட்டுமே வைத்து முடிவு செய்யாதீர்கள். அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகவும் சிறப்பான முறையில் விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். மேலும் 6 முதல் 8 போட்டிகளை கொடுத்து அதை வைத்து வேண்டுமானால் முடிவு செய்யலாம்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : 5வது டெஸ்ட்.. மிரட்டும் லண்டன் ஓவல் ஆடுகளம்.. நிச்சயம் போட்டி டிரா ஆகாது.. இந்தியா என்ன செய்யனும்?
தற்போது ஐந்தாவது போட்டியில் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு தரப்படாதது சமூக வலைதளத்தில் விமர்சனங்களை உருவாக்கி இருக்கிறது. வெள்ளைப் பந்து அணியை போல டெஸ்ட் அணியை கம்பீர் பார்ப்பதால் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் பெரிய அளவில் பாதிக்கப்படுவதாக விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.






