இந்தியா, இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதிய முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா ரவுண்ட் ராபின் முறைப்படி ஒவ்வொரு அணியுடன் இரண்டு முறை மோதியது. இதில் இலங்கைக்கு எதிராக ஒரு போட்டியில் மட்டும் இந்தியா தோல்வியை தழுவியது.
இதன் மூலம் இறுதிச்சுற்று இந்தியாவும் இலங்கை அணியும் பல பரிட்சை நடத்தியது. கொழும்புவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தானா மற்றும் பிரதிகா ராவல் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஸ்மிருதி அபார சதம்:
இந்த ஜோடி முதல் பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து நிதானமாக இந்த ஜோடி விளையாட முதல் விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்தது. பிரதிகா ராவல் 30 ரன்களில் ஆட்டம் இழக்க ஸ்மிருதி மந்தானா நிதானமாக விளையாடி 55 பந்தில் அரை சதம் அடித்தார்.
இதேபோன்று நடுவரிசை வீராங்கனை ஆன ஹர்லின் டியோல் 56 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். இதேபோன்று கேப்டன் ஹர்மன் பிரித் கவுர் 30 பந்துகளில் 41 ரன்களும் ஜெமிமா ரோட்டரிக்யூஸ் 29 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தனர். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுபக்கம் அபாரமாக விளையாடிய ஸ்மிருதி மந்தானா 101 பந்துகளில் 116 ரன்கள் எடுத்து அசத்தினார்.
342 ரன்கள் குவித்த இந்தியா:
குறிப்பாக ஸ்மிருதி மந்தானா 88 ரன்கள் எடுத்திருந்தபோது தொடர்ந்து மூன்று பவுண்டரிகள் விளாசி சதத்தை 92 பந்துகளில் பூர்த்தி செய்தார். 116 ரன்கள் எடுத்த ஸ்மிருதி இன்னிங்ஸில் 15 பவுண்டர்களும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இது ஸ்ருதி மந்தானாவுக்கு 11 வது சதமாகும்.
இதையும் படிங்க: 10 ஆயிரம் ரன்கள் எடுப்பதற்கு முன்பே ஓய்வு பெற்று விடுவாரா கோலி? 12 ஆண்டுகளுக்கு முன்பு கோலி சொன்னது என்ன?
ஏற்கனவே ஸ்மிருதி மந்தானா ஒருநாள் கிரிக்கெட்டில் 31 அரை சதமும் அடித்திருக்கிறார். இறுதியில் அமன்ஜோத் கவுர் 18 ரன்களும், தீப்தி சர்மா 20 ரன்களும் எடுக்க இந்திய மகளிர் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 342 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 343 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி இலங்கை அணியும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.






