நடப்பு ஐபிஎல் தொடரில் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கும் 14 வயதான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் வைபவ் சூரியவன்சியை அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நாம் பார்க்க முடியாமலும் போகலாம் என வீரேந்தர் சேவாக் எச்சரிக்கை செய்திருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் காயம் அடைய லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 1.10 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட வைபவ் சூரியவன்சி அறிமுகமானார். அவர் தான் சந்தித்த முதல் பந்தையே சிக்ஸருக்கு அடித்து அனைவரது கவனத்தையும் கவர்ந்தார். மேலும் நேற்று புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் இரண்டு சிக்ஸர்கள் அடித்து மீண்டும் அதிரடியாக முற்பட்டு ஆட்டம் இழந்தார்.
மாறிய ஐபிஎல் தொடர்
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தற்போது அதிக ரன் அடித்திருக்கும் பேட்ஸ்மேன்களை எடுத்துக் கொண்டால் அனைவரும் அனுபவ பேட்ஸ்மேன்களாக இருக்கிறார்கள் என்றும், அதில் இளம் வீரர்கள் யாரும் இல்லை என்றும், இளம் வீரர்கள் முதல் பந்திலேயே சிக்சர் அடிப்பதால் எந்த பயனும் இல்லை என்றும் கூறியிருந்தார்.
இதற்கு ஏற்ற வகையில் அதிரடியாக ஆடக்கூடிய இளம் வீரர்கள் யாருமே நிலைத்து நின்று பெரிய ரன்கள் எடுக்கக்கூடியவர்களாக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் அணிக்காக 39 பந்தில் சதம் அடித்திருந்த பிரியன்ஸ் ஆர்யா அதற்கு அடுத்து எந்த ஒரு போட்டியிலும் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டு விளையாடாமல் போகலாம்
இதுகுறித்து வீரேந்தர் சேவாக் கூறும்பொழுது “நன்றாக விளையாடினால் பாராட்டும் நன்றாக விளையாடவில்லை என்றால் விமர்சனமும் வரும் என இளம் வீரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் எந்த நிலையிலும் மிகவும் பணிவாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். ஓரிரு போட்டிகளில் புகழ் பெறும் வீரர்களை நான் பார்த்திருக்கிறேன். அதற்குப் பிறகு அவர்கள் வேறு எதையுமே செய்ய மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் நட்சத்திர வீரர்கள் ஆக மாறி இருப்பார்கள்”
இதையும் படிங்க : 2024 ஆர்சிபியால் செய்ய முடிந்தது.. ஆனால் சிஎஸ்கே வால் செய்ய முடியாது?.. காரணங்கள் என்ன? – முழு அலசல்
“சூரியவன்சி ஐபிஎல் தொடரில் 20 வருடங்கள் விளையாட முயற்சி செய்ய வேண்டும். விராட் கோலியை எடுத்துக் கொண்டால் அவர் 19 வயதில் ஐபிஎல் தொடரில் விளையாட ஆரம்பித்தார். தற்போது அவர் 18 வது ஆண்டாக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். விராட் கோலியை போல சூரியவன்சி அதிக ஆண்டுகள் விளையாடுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை முயற்சி செய்ய வேண்டும். அவர் இந்த ஐபிஎல் தொடரில் மகிழ்ச்சியாக இருப்பார் ஏனென்றால் அவர் இப்பொழுது கோடீஸ்வரன். அவருக்கு ஒரு சிறந்த அறிமுகம் கிடைத்தது முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தார். ஆனால் அவரை அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நாம் பார்க்க முடியாமலும் போகலாம்” என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.






