இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபியில் ஏழு இன்னிங்ஸ்களில் ஒரே ஒருமுறை மட்டுமே ஆட்டம் இழந்து 5 சதங்களோடு இதுவரை 752 ரன்கள் குவித்து இருக்கிறார்.
இந்த நிலையில் இந்திய முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இவரது சாதனைக்கு பாராட்டும் விதமான சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
உள்நாட்டுத் தொடரில் அசத்தும் கருண் நாயர்
கருண் நாயர் கடந்த 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்து தனது திறமையை உலகிற்கு நிரூபித்தார். ஆனால் அதற்குப் பிறகு சிறப்பாக செயல்பட தவறியதால் இந்திய அணியில் அதற்குப் பிறகு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்குப் பிறகு இந்தியாவின் உள்நாட்டு தொடரான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரிலும் விளையாடிய நிலையில் இவர் சிறப்பாக செயல்படவில்லை. இதனால் ஐபிஎல் தொடரிலும் இவருக்கான வாய்ப்புகள் சரியாக அமையவில்லை.
இந்த சூழ்நிலையில் இந்தியாவில் நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராஃபியில் விதர்பா அணிக்காக தனது ஒட்டுமொத்த திறமையை வெளிப்படுத்தி இருக்கும் கருண் நாயர் இதுவரை 7 இன்னிங்ஸ்களில் 752 ரன்கள் குவித்து மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறார். இது உள்நாட்டு கிரிக்கெட்டில் யாருமே படைத்திடாத ஒரு மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. மேலும் சாம்பியன் டிராபி தொடரில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த வேளையில் இவ்வளவு சிறப்பாக விளையாடியும் ஒரு நாள் அணி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு விட்டதால் இனி இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தினேஷ் கார்த்திக் கூறியிருந்தார். இந்த சூழ்நிலையில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இவருக்கு நம்பிக்கை அளிக்கும் சில வார்த்தைகளை கூறியிருக்கிறார்.
ஆறுதல் அளித்த சச்சின் டெண்டுல்கர்
இது குறித்து சச்சின் கூறும் பொழுது ” ஏழு இன்னிங்ஸ்களில் 5 சதம் மற்றும் 752 ரன்கள் அடிப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. இது ஒரு அசாதாரணமான விஷயமாகும். இது போன்ற செயல்கள் யாவும் வெறுமனே நடந்து விடுவதில்லை. அபார கவனம் மற்றும் அபார கடின உழைப்பு போன்றவற்றினால் மட்டுமே வருகிறது. இனி தொடர்ந்து முன்னேறி கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் பெரிய மாற்றம் நடக்கும்” என்ற சச்சின் டெண்டுல்கர் கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க:4 ஓவர் 25 ரன் 4 விக்கெட்.. சிஎஸ்கே வீரர் அசத்தல் பவுலிங் .. 58 ரன் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் முதல் வெற்றி
சச்சின் டெண்டுல்கரின் இந்த ஆறுதல் வார்த்தைகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம் கிடைக்காவிட்டாலும் இதே மாதிரியான பங்களிப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் நிலையில் விரைவாக இவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டுத் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் அனைவரும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்த நிச்சயம் தவறுவதில்லை.






