இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு உரிய கௌரவம் கொடுக்கப்படவில்லை என்றும், அவரை வெளியே அனுப்புவதற்கு ஒவ்வொரு முறையும் முயற்சிகள் நடந்தது என்றும் சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணிக்காக 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளேவுக்கு பிறகாக அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளராக இருக்கிறார். மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை தொடர் நாயகன் விருது வென்றதில் முதலிடத்தில் இருக்கும் முத்தையா முரளிதரனை சமன் செய்திருக்கிறார்.
மறுக்கப்பட்ட கௌரவ வாய்ப்பு
ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்துவதற்கான தகுதியோடு ஆரம்பத்திலிருந்து இருந்திருக்கிறார். ஆனால் எந்த இடத்திலும் ஒரு சாதாரண கேப்டன் இல்லாத டெஸ்ட் போட்டிக்கும் கூட அவருக்கு அந்த பொறுப்பு கொடுக்கப்பட்டதில்லை. மேலும் துணை கேப்டன் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது கிடையாது.
இது குறித்து பேசி இருக்கும் சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “இந்திய டெஸ்ட் அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு நல்ல கேப்டனாக இருந்திருக்க முடியும். ஆனால் அவருக்கு துணை கேப்டன் வாய்ப்பு கூட மறுக்கப்பட்டது. அவருக்கு தாமதமாக ஒரு டெஸ்ட் போட்டி அல்லது ஏதாவது ஒரு போட்டியில் கௌரவ கேப்டன் பொறுப்பு கொடுக்க வாய்ப்பு இருந்தது ஆனால் அதுவும் கொடுக்கப்படவில்லை. அவருடைய நூறாவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு ரோகித் சர்மா பெருமைப்படுத்தும் விதமாக மைதானத்தில் நடந்து கொண்டது இதனால்தான் சிறப்பானதாக இருந்தது”
வெளியேற்ற முயற்சிகள் நடந்து கொண்டே இருந்தது
“கிரிக்கெட் பேட்டர்களின் விளையாட்டாக இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு பந்துவீச்சாளராக அஸ்வின் தொடர்ந்து தொடர் நாயகன் விருதுகளை பெற்றுக் கொண்டிருந்தார். இது பேட்ஸ்மேன்களை பெருமைப்படுத்துவதாக இல்லை. ஒவ்வொரு முறையும் பிளேயிங் லெவலில் இருந்து அவரை வெளியேற்றுவதற்கு இவர்கள் ஒரு ஐந்து சதவீத காரணத்தை வைத்துக் கொண்டே இருந்தார்கள்”
இதையும் படிங்க:ஆஸிக்கு தரமாவும் .. இந்தியாவுக்கு மோசமாவும் பயிற்சி ஆடுகளம் கொடுத்தது ஏன்? – ஆடுகள அமைப்பாளர் தெரிவித்த காரணம்
“இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் இல்லாமல் வெல்ல முடியாது என்று தெரிந்ததால் இவர்களால் அவரை விட முடியவில்லை. அதே சமயத்தில் வெளிநாட்டின் ஆடுகள சூழ்நிலை ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பந்துவீச்சாளருக்கு பொருந்தாது என்றால், பேட்ஸ்மேன்களுக்கு மட்டும் எப்படி பொருந்தும்? நீங்கள் ஒரு பந்துவீச்சாளரை இதற்காக வெளியே உட்கார வைத்தால், பேட்ஸ்மேனை அப்படி ஏன் எங்கும் உட்கார வைப்பதில்லை? ஆஸ்திரேலியா சூழ்நிலையில் யார் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்” என்று கூறி இருக்கிறார்.






