5ரன்னை தாண்டாத 9வீரர்கள்.. 7ஓவரில் மேட்சை முடித்த தமிழ்நாடு.. காலிறுதிக்கு தகுதி பெற்று அசத்தல்!

0
2250
Varun

இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு ஒருநாள் போட்டி கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி தற்பொழுது நடைபெற்று வருகிறது.

மொத்தம் 38 அணிகள் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. இதில் ஐந்தாவது பிரிவான இ பிரிவில் பெங்கால், மத்திய பிரதேஷ், கோவா, பரோடா, பஞ்சாப், நாகாலாந்து ஆகிய அணிகளுடன் தமிழ்நாடு அணி இடம் பெற்று இருக்கிறது.

- Advertisement -

இன்று தனது லீக் போட்டியில் ஐந்தாவது ஆட்டத்தில் நாகலாந்து அணிக்கு எதிராக தமிழ்நாடு அணி விளையாடியது. இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற தமிழ்நாடு பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.

அனுபவம் குறைவான நாகலாந்து வீரர்களால் அனுபவம் மற்றும் திறமையான தமிழக வீரர்களை எதிர்த்து விளையாடுவது முடியாத காரியமாக இருந்தது. 19.4 ஓவர்களில் வெறும் 69 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் 9 வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தார்கள். சுமித் குமார் மட்டுமே 20 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார்.

தமிழக அணியின் தரப்பில் சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ஐந்து ஓவர்களில் மூன்று மெய்டன்கள் செய்து, ஒன்பது ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட் கைப்பற்றினார். சாய் கிஷோர் மூன்று விக்கெட்டுகள், சந்திப் வாரியர் மற்றும் நடராஜன் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு அதிரடியாக சாய் கிஷோரை துவக்க வீரராக அனுப்பினார்கள். அவருடன் நாராயணன் ஜெகதீசன் வந்தார். சாய் கிஷோர் 25 பந்துகளில் 37 ரன்கள், நாராயணன் ஜெகதீசன் 22 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நிற்க, தமிழக அணி 7.5 ஓவர்களில் இலக்கை எட்டி, பத்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தமிழக அணி தனது ஐந்தாவது லீக் போட்டியில் நான்காவது போட்டியை வென்று அசத்தியிருக்கிறது. மேலும் தமிழக அணிக்கு ஒரு போட்டி எஞ்சி இருக்கிறது. இந்த நிலையில் 16 புள்ளிகள் பெற்று, தமிழக அணி காலிறுதிக்கு தகுதி பெற்று இருக்கிறது!