9 பேர் நீக்கம்.. வெ.இ ODI தொடர் இங்கிலாந்து அணி அறிவிப்பு.. பென் ஸ்டோக்ஸ்க்கு இடம் இருக்கா.?.. உலக கோப்பை தோல்வியால் அதிரடி.!

0
37098

நடப்பு உலக கோப்பை தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்று இங்கிலாந்து. 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் பெற்ற இங்கிலாந்து அணி ஒரு நாள் போட்டிகளில் உலகின் தலைசிறந்த அணிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த வருட உலகக் கோப்பையில் அந்த அணி பங்கு பெற்றது. நிச்சயமாக அரை இறுதியில் ஒரு இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2023 ஆம் வருட உலகக் கோப்பையில் மோசமான தோல்வியை சந்தித்து வெளியேறி இருக்கிறது.

இங்கிலாந்து அணி விளையாடிய 9 போட்டிகளில் பாகிஸ்தான் நெதர்லாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுடன் மூன்று வெற்றிகளை பெற்று 6 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தைப் பெற்று இருப்பதோடு 2025 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக் தகுதி பெற்று இருக்கிறது. மேலும் இந்த உலகக்கோப்பை தொடரில் அந்த அணி ஆப்கானிஸ்தான் உடன் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு மறு சீரமைக்கப்பட்ட இங்கிலாந்து அணி உலக கிரிக்கெட்டில் தலைசிறந்த ஒரு நாள் போட்டி அணியாக விளங்கி வந்தது.

- Advertisement -

2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையையும் வென்று இங்கிலாந்து ஒரே நேரத்தில் டி20 மற்றும் 50 ஓவர் உலகச் சாம்பியன் ஆக வலம் வந்தது. இந்த வருட உலக கோப்பையில் சிறப்பாக விளையாடி சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உலகக்கோப்பை தொடரின் ஆரம்பத்தில் இருந்தே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. நியூசிலாந்து அணியுடன் ஆனால் முதல் போட்டியில் ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த இங்கிலாந்து அந்த தோல்வியிலிருந்து மீளவே இல்லை.

இந்த உலகக் கோப்பை போட்டிகளின் தோல்விக்கு பிறகு இங்கிலாந்து அணி அதிரடியாக பல மாற்றங்களை செய்து இருக்கிறது. உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளைக் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது. இந்தப் போட்டிகள் டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி துவங்கி 21 ஆம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் தீவுகளில் நடைபெற இருக்கிறது. இதற்காக இங்கிலாந்து அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. உலகக் கோப்பை அணியில் இடம் பெற்ற ஒன்பது வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த வருட உலகக்கோப்பை போட்டியில் ஏற்பட்ட தோல்வியின் எதிரொலி மற்றும் 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை அதனைத் தொடர்ந்து 2025-ல் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2027 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை ஆகியவற்றை மனதில் வைத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த அதிரடி முடிவை எடுத்திருக்கிறது. இதன் காரணமாக தற்போதைய உலக கோப்பையில் விளையாடிய ஒன்பது வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

2023 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடுவதற்காக ஓய்வை திரும்பப்பெற்ற பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட், மொயின் அலி, அதில் ரஷீத், டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோ போன்ற மூத்த வீரர்கள் இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். எனினும் கேப்டன் ஜோஸ் பட்லர் அணித் தலைவராக தொடர்வதற்கு இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் நிர்வாகம் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறது. எதிர்கால போட்டிகளை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இங்கிலாந்து ஓடிஐ அணி:
ஜோஸ் பட்லர் (கேப்டன்), ரெஹான் அகமது, கஸ் அட்கின்சன், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், சாக் க்ராலி, சாம் கரன், பென் டக்கெட், டாம் ஹார்ட்லி, வில் ஜாக்ஸ், லியாம் லிவிங்ஸ்டன், ஒல்லி போப், பில் சால்ட், ஜோஷ் டங், ஜான் டர்னர்.

டி20 அணி:
ஜோஸ் பட்லர் (கேப்டன்), ரெஹான் அகமது, மொயின் அலி, கஸ் அட்கின்சன், ஹாரி புரூக், சாம் கரன், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், லியாம் லிவிங்ஸ்டன், டைமல் மில்ஸ், அடில் ரஷித், பில் சால்ட், ஜோஷ் டங்கு, ரீஸ் டாப்லி, ஜான் டர்னர், கிறிஸ் வோக்ஸ்