70 ரன்கள் 7 விக்கெட்; 22 ஆண்டாக ஆஸிக்கு தொடரும் சோகம்; இங்கிலாந்து அபார வெற்றி; பிராட் விடை பெற்றார்!

0
15007
Ashes2023

இங்கிலாந்தில் இரண்டாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முடிந்து ஆரம்பித்த, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் 5 போட்டிகள் கொண்ட உலகப் புகழ்பெற்ற ஆசஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தற்பொழுது முடிவுக்கு வந்திருக்கிறது!

தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கென்னிங்டன் ஓவலில் நான்கு நாட்களுக்கு முன் ஆரம்பித்தது. இந்தப் போட்டியை ஆஸ்திரேலிய வென்றால் 22 வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும், இங்கிலாந்து வென்றால் தொடரை சமன் செய்து ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் சோகத்தை கொடுக்கும் என்ற நிலை இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 283 ரன்களும், இரண்டாவது பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 295 ரன்களும், மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து 395 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலியா அணிக்கு 384 ரன்கள் இலக்கு வைக்கப்பட்டது.

இந்த இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணி நான்காம் நாள் முடிவில் விக்கெட் இழப்பில்லாமல் 130 ரன்கள் எடுத்திருக்க, இன்று ஐந்தாவது நாளில் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் என்று, 22 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் தொடரை வெல்வதற்கான வாய்ப்பு இருந்தது.

ஆனால் இதற்குப் பிறகு இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அதிரடியாக செயல்பட்டு அடுத்த 70 ரன்களில் ஆஸ்திரேலியாவின் ஏழு விக்கெட்டுகளையும் வீழ்த்தி, 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஆசஸ் தொடரை 2-2 என சமன் செய்து அசத்தி விட்டார்கள்.

- Advertisement -

இந்தப் போட்டியை டிரா செய்தால் கூட தொடரைக் கைப்பற்றி விடலாம் என்று நினைப்பிலிருந்த ஆஸ்திரேலியாவுக்கு, திடீரென்று இங்கிலாந்து எழுச்சி அடைந்து தந்த பதிலடியை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இது தொலைக்காட்சியில் ஆஸ்திரேலியா வீரர்களின் முகத்தை பார்க்கும் பொழுது தெளிவாக தெரிந்தது.

மேலும் இந்த போட்டியோடு இங்கிலாந்து அணிக்காக 604 சர்வதேச டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கின்ற ஸ்டூவர்ட் பிராட் ஓய்வு பெறுகின்ற காரணத்தினால் இங்கிலாந்து வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு காணப்பட்டார்கள். அதற்கேற்றார் போல் கடைசி இரண்டு விக்கெட்டுகளையும் ஸ்டுவர்ட் பிராட் கைப்பற்ற, அற்புதமான காட்சிகள் மைதானத்தில் அரங்கேறியது.

மேலும் மழையால் பாதிக்கப்பட்டு முடிவில்லாமல் போன நான்காவது டெஸ்ட் போட்டி மட்டும் நடைபெற்று இருந்தால், அந்தப் போட்டியை கண்டிப்பாக இங்கிலாந்து ஜெயிப்பதற்குதான் அதிகபட்ச வாய்ப்புகள் இருந்தது. இந்த வகையில் ஒட்டுமொத்தமாக எடுத்துப் பார்த்தால் இந்த ஆசஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்தின் கையே ஓங்கி இருந்தது என்று கூறலாம்!