சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் என இரண்டு சாம்பியன் அணியிலும் இடம் பெற்று விளையாடிய ஒரு சில கிரிக்கெட் வீரர்கள்

0
706
Jason Holder and Wridhiman Saha

ஐபிஎல் தொடரை பொறுத்தமட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரையும் சேர்த்து மொத்தமாக 12 வருடங்களில் 11 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணியாக வலம் வந்து கொண்டிருக்கிறது. மூன்று முறை கோப்பையை கைப்பற்ற அணியாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் தன்னுடைய பெயரை தடம் பதித்துள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டேவிட் வார்னர் தலைமையில் ஒரே ஒரு முறை மட்டும், 2016-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் கோப்பையை கைப்பற்றியது.

தற்பொழுது இந்த இரண்டு அணிகளை பற்றி பேசுவதற்கான காரணம் என்னவென்றால் இந்த இரண்டு அணியிலும் பங்கு பெற்று விளையாடிய வீரர்கள் ஒரு சிலர் இருக்கின்றனர். 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் துவங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை ஒரு சில கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே ஆரம்பத்தில் இருந்து ஒரே அணிக்காக விளையாடி வருகின்றனர். மறுபக்கம் பல்வேறு வீரர்கள் ஒரு அணியில் இருந்து இடம் மாறி வேறு அணியில் விளையாடி இருக்கின்றனர். அப்படி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் என இரண்டு அணியிலும் இடம் பெற்று விளையாடிய வீரர்களை பற்றி பார்ப்போம்

ஸ்ரீகாந்த் அனிருதா

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் இவரது பெயரை மறந்து விட மாட்டார்கள். 2011ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிராக நடந்த போட்டியில், காலிஸ், பாலாஜி மற்றும் யூசுப் பதான் போன்ற பந்துவீச்சாளர்களுக்கு எதிராக மிக அற்புதமாக விளையாடி 55 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். சென்னை அணிக்காக ஸ்ரீகாந்த் அனிருதா 2008ஆம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டுவரை விளையாடினார்

2014ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இவரை ஐபிஎல் ஏலத்தில் விலைக்கு வாங்கியது. ஆனால் அந்த வருடம் நடந்த ஐபிஎல் தொடரில் இவர் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது.

விருத்திமான் சஹா

இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் ஒரு அண்டர் ரேட்டெட் பேட்ஸ்மேன் இந்த சஹா. இந்திய அணியிலும் சரி ஐபிஎல் தொடரில் இவர் விளையாடும் அணியிலும் சரி அவ்வளவாக இவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கப் பெறாது.

2020 ஆம் ஆண்டு முதல் தற்பொழுது வரை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் விளையாடி வரும் இவர் மொத்தமாக 20 போட்டிகளில் 472 குவித்துள்ளார். சஹா 2011 ஆம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று மூன்று ஆண்டுகள் விளையாடினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 144 ரன்கள் சஹா குவித்துள்ளார்.

திசாரா பெரேரா

இலங்கையைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் வீரரான இவர் ஐபிஎல் தொடரை பொறுத்த வரையில் பல்வேறு அணிக்கு விளையாடிய ஒரு வீரர். 2010ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தன்னுடைய ஐபிஎல் கேரியரை இவர் தொடங்கினார். இவர் விளையாடிய அந்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இருப்பினும் அந்த ஆண்டு இவர் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே சென்னை அணியில் இடம் பெற்று விளையாடினார்.

அதன்பின்னர் பெரேரா 2013ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்று விளையாடினார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு, அந்த வருடம் மிக அற்புதமாக விளையாடி 273 ரன்கள் குவித்ததோடு மட்டுமல்லாமல், 19 விக்கெட்டுகளையும் கைப்பற்றி திசாரா பெரேரா அசத்தினார்.

பார்த்தீவ் பட்டேல்

பெரேரா எப்படி தன்னுடைய ஐபிஎல் கேரியரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடங்கினாரோ, அதேபோல 2008ஆம் ஆண்டு பார்த்தீவ் பட்டேல் தன்னுடைய ஐபிஎல் கேரியரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடங்கினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றிய 2010ஆம் ஆண்டு பார்த்தீவ் பட்டேல் அந்த அணியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
சென்னை அணிக்காக மூன்று வருடங்கள் விளையாடிய இவர், மொத்தமாக 516 ரன்களை குவித்துள்ளார்.

சென்னை அணிக்காக மூன்று வருடம் விளையாடிய இவர், 2013ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம் பெற்றார். அந்த ஒரே ஒரு வருடம் மட்டும் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய பார்த்தீவ் பட்டேல் 294 ரன்கள் குவித்தார்.

ஆஷிஷ் நெஹ்ரா

இந்திய முன்னால் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெக்ரா டி20 போட்டிகளில் பல ரெக்கார்டுகளை வைத்துள்ளார். 2014ம் ஆண்டு ஆஷிஷ் நெஹராவை சென்னை சூப்பர் கிங்ஸ் விலைக்கு வாங்கியது. சென்னை அணிக்காக 20 போட்டிகளில் 30 விக்கெட்டுக்களை ஆஷிஸ் நெஹ்ரா கைப்பற்றியுள்ளார். ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக இவர் விளையாடிய விதத்தை பார்த்த பிசிசிஐ மீண்டும் இந்திய அணியில் இவரை விளையாட வைத்தது தனிச்சிறப்பு.

2014 முதல் 2015 ஆம் ஆண்டு வரை சென்னை அணியில் விளையாடிய நெஹ்ரா, 2016மற்றும் 2017 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம் பெற்று விளையாடினார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 14 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை இவர் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

கரண் ஷர்மா

லெக் ஸ்பின் பந்து வீச்சாளரான கரண் ஷர்மா சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 2013 முதல் 2014 ஆம் ஆண்டு வரையில் மிக அற்புதமாக விளையாடிய ஒரு வீரர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக மொத்தமாக 46 போட்டிகளில் 36 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய கரண் சர்மாவின் பௌலிங் ஆவெரேஜ் 7.83 மட்டுமே ஆகும்.

2018 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை அந்த ஆண்டு தொடருக்கான ஏலத்தில் விலைக்கு வாங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 12 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை கரண் ஷர்மா அந்த வருடம் கைப்பற்றனார்.

ஜேசன் ஹோல்டர்

2020-ம் ஆண்டு முதல் நடப்பு ஐபிஎல் தொடர் வரை ஹைதராபாத் அணிக்கு விளையாடி வரும் ஜேசன் ஹோல்டர் இதற்கு முன்னர் இரண்டு வருடங்கள் இதே ஐதராபாத் அணியில் இடம் பெற்று விளையாடி இருக்கிறார். 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இவர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பெற்ற விளையாடியது குறிப்பிடத்தக்கது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஜேசன் ஹோல்டர் 25 விக்கெட்டுகளை இதுவரை கைப்பற்றியுள்ளார்.

2013ம் ஆண்டு மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஜேசன் ஹோல்டர் இடம்பெற்று விளையாடினார். அந்த வருடம் ஆறு போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜேசன் ஹோல்டரை விளையாட வைத்தது. ஆறு போட்டியில் விளையாடிய அவர் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே சென்னை அணிக்காக கைப்பற்றினார்.