நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 128 பந்தில் மேக்ஸ்வெல் 201 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்து ஆஸ்திரேலியா அணியை வெற்றி பெற வைத்தார்.
மேக்ஸ்வெல்லின் இந்த அதிரடியான ஆட்டம் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு எவ்வளவு முக்கியமானதாக இருந்ததோ, இதற்கு நேர் எதிரான பேட் கம்பெனி ஆட்டமும் ஆஸ்திரேலியா வெற்றிக்கு மிக முக்கியமாக இருந்தது.
மேக்ஸ்வெல் உடன் இணைந்து எட்டாவது விக்கட்டுக்கு விளையாடிய கமெண்ட்ஸ் நேற்று 68 பந்துகளை சந்தித்து எடுத்தது வெறும் 12 ரன்கள்தான். ஆனால் அவர் மேக்ஸ்வெல்லுக்கு கொடுத்த ஒத்துழைப்பும் களத்தில் அவரை வழி நடத்திய விதமும் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது.
நேற்று கம்மின்ஸ் விக்கெட்டை காப்பாற்றும் நோக்கத்தில் உள்ளே வரும் பந்துகளை மட்டுமே விளையாடினார். வெளியே செல்லும் எந்த பந்துகளுக்கும் பெரிதாக ரன் அடிக்க முயற்சி செய்யவில்லை. மேலும் மேக்ஸ்வெல்லுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்ட பொழுது, அந்த நேரத்தில் மிகவும் பொறுப்பாக களத்தில் நின்று, மேக்ஸ்வெல்லை சரியான ரன்களுக்கு வழி நடத்தினார்.
நேற்று இருவருக்கும் இடையில் களத்தில் என்ன மாதிரியான பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது? இருவரும் என்ன திட்டங்கள் வைத்திருந்தார்கள்? என்பது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்பட்டது.
இதுகுறித்து பதில் அளித்துள்ள கம்மின்ஸ் “ஆரம்பத்தில் நாங்கள் மிஸ்டரி ஸ்பின்னர்கள்தான் பிரச்சனையாக இருப்பார்கள் என்று நினைத்தோம். பந்து நன்றாக சுழன்று கொண்டிருந்தது. அவர்களும் நன்றாக வீசிக் கொண்டு இருந்தார்கள். இன்னொரு பக்கம் மேக்சி சுதந்திரமாக ஸ்கோர் அடித்துக் கொண்டிருந்தார்.
இது பேட்டிங் செய்ய எளிதான ஒரு விக்கெட் என்று எங்களுக்கு தெரியும். எனவே மேக்ஸி களத்தில் இருக்கும் பொழுது ரன் ரேட் ஒரு பிரச்சினையாக இருக்காது என்று எனக்கு தெரியும். எனவே என்னை பொறுத்தவரை நான் என் விக்கெட்டை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமே முக்கியமானது. மற்ற வேகப்பந்துவீச்சாளர்களை பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன்.
எனது திட்டம் மிகவும் எளிமையாக இருந்தது. நாங்கள் எதையும் மிக தூரமாக யோசிக்கவில்லை. ஆனால் இதில் மேக்ஸி சற்று வித்தியாசமாக இருக்கலாம். அவர் எப்பொழுதும் வெற்றி குறித்து திட்டமிடுகிறார். எனவே இருநூறு ரன்கள் தேவைப்பட்டாலும், அதை எப்படி எட்டுவது என்று அவருக்குத் திட்டம் இருந்தது. நான் என் விக்கெட்டை காப்பாற்ற விளையாடினேன்.
இறுதியில் கிட்டத்தட்ட அவருடைய தசைப் பிடிப்பினால் அவரால் ஓட முடியவில்லை. இதன் காரணமாக ஓடி ரன்கள் எடுக்க வேண்டாம் என்று அவரை அங்கேயே இருக்க சொன்னேன். ஏனென்றால் அவர் கிரிஸில் இருந்தால் போதும் ரன் எப்படி வந்துவிடும்!” என்று கூறியிருக்கிறார்!