64*, 90, 86, 96.. அடித்து நொறுக்கும் சாய் சுதர்சன்.. அடுத்தடுத்து வரிசையாக நான்கு டி20 அரை சதங்கள்!

0
1488
Tnpl2023

எதிர்காலத்தில் இந்திய அணிக்காக மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடக்கூடிய அளவுக்குத் திறமை வாய்ந்த ஒரு இளம் தமிழக பேட்ஸ்மேன் கிடைத்திருக்கிறார். அவர் சாய் சுதர்சன்!

2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் யாரும் எதிர்பாராத விதமான ஒரு அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் ஏலத்தில் உருவாக்கிக் கொண்டிருந்தது.

- Advertisement -

அப்பொழுது அந்த அணி நிர்வாகம் ஈழத்தில் வாங்கிய வீரர்களை வைத்து பார்க்கும் பொழுது அந்த அணிதான் மிகவும் பலவீனமாக இருப்பதாக கணிக்கப்பட்டு கடைசி இடமே வழங்கப்பட்டது.

அப்படியான அணியில் அடிப்படை விலையான இருபது லட்ச ரூபாய்க்கு தமிழக இடது கை பேட்ஸ்மேன் சாய் சுதர்சனும் வாங்கப்பட்டார். வாங்கப்பட்டதோடு சில வாய்ப்புகளையும் பெற்று அசத்தலாகவே விளையாடினார்.

ஆனால் இந்த வருடம் அவர் பெற்ற வாய்ப்புகள்தான் மிகவும் சிறப்பானவை. ஆரம்பத்தில் வாய்ப்பு கொடுத்து பின்பு அவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், குஜராத் அணி நிர்வாகம் ஒரு நிலையான பேட்ஸ்மேன் வேண்டும் என்று உணர்ந்து அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை கொடுக்க, அவர் அங்கிருந்து வேறு ஒரு ரகத்தில் விளையாட ஆரம்பித்தார்.

- Advertisement -

இதற்கு உச்சமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக அவர் விளையாடிய 96 ரன்கள், அவர் எப்படிப்பட்டவர் என்பதை உலகத்திற்குக் காட்டியது. அவரின் பேட்டிங் தரம் என்னவென்று மற்றவர்களுக்குப் புரிந்தது.

அங்கிருந்து அப்படியே கிளம்பி தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடருக்கு லைக்கா கோவை கிங்ஸ் அணிக்காக விளையாட வந்த சாய் சுதர்சன் வரிசையாக மூன்று அரை சதங்கள் அடித்து மிரள விட்டிருக்கிறார்.

இந்தத் தொடரில் திருப்பூர் அணிக்கு எதிராக 86 ரன்கள், நெல்லை அணிக்கு எதிராக 90 ரன்கள் சேப்பாக்கம் அணிக்கு எதிராக ஆட்டம் இழக்காமல் 64 ரன்கள் என்று அமர்க்களப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இதில் ஐபிஎல் தொடரில் அவர் சென்னை அணிக்கு எதிராக அடித்த அரை சதத்தோடு தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் நான்கு அரை சதங்களை விளாசி இருக்கிறார். மேலும் நடப்பு டிஎன்பிஎல் தொடரில் சாய் சுதர்சன்தான் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கான இந்திய அணி வாய்ப்பு மிக வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்!