விராட் கோலி இடத்துக்கு போட்டி போடும் 6 வீரர்கள்.. யாருக்கு வாய்ப்பு?.. இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடர்

0
549
Rinku

உலகில் இந்திய அணி எந்த நாட்டில் விளையாடினாலும் சரி, எந்த வடிவத்தில் விளையாடினாலும் சரி, ரசிகர்கள் மைதானத்திற்கு வந்து கொடுக்கும் வரவேற்பு என்பது வேறு எந்த அணிக்கும் கிடைக்காத ஒரு சிறப்பு.

இந்த நிலையில் இந்திய அணி உள்நாட்டில் 5 போட்டிகள் கொண்ட பெரிய டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாட இருக்கின்ற காரணத்தினால், கிரிக்கெட் உலகம் மிகவும் எதிர்பார்ப்பில் இருந்தது.

- Advertisement -

மேலும் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் 700க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து, சிறப்பான பேட்டிங் ஃபார்மில் இருந்த விராட் கோலி, அதை இங்கிலாந்துக்கு எதிராக எப்படி தொடர்வார் என்று அவருடைய ரசிகர்கள் தாண்டி மற்ற கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்து இருந்தார்கள்.

இப்படியான நிலையில் விராட் கோலி குடும்பம் சார்ந்த தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் விலகி இருக்கிறார். தற்பொழுது அவருடைய இடத்திற்கு எந்த வீரரைக் கொண்டு வந்தால் சரியாக இருக்கும்? என்று இந்த சிறிய கட்டுரை தொகுப்பில் பார்க்கலாம்.

ரஜத் பட்டிதார் மத்திய பிரதேசம் :

- Advertisement -

விராட் கோலி உடன் இணைந்து ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு விளையாடி வரும் இந்த இளம் வீரர் அதிரடியான பேட்டிங் அணுகுமுறையை கொண்டு இருக்கிறார். கடந்த ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத இவர், அதற்குப் பிறகு திரும்ப வந்து சிறப்பான முறையில் தொடர்ந்து விளையாடுகிறார். சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக தனி வீரராக 151 ரன்கள் அதிரடியாக குவித்து அசத்தியிருக்கிறார். விராட் கோலியை போலவே வலது கை வீரர். இந்திய சூழ்நிலைகளில் தாராளமாக நம்பலாம்.

ரிங்கு சிங் உத்தரப்பிரதேசம் :

இந்த வீரருக்கான அறிமுகங்கள் தேவைப்படாது. வெள்ளைப்பந்து கிரிக்கெட்டை போலவே சிவப்புப்பந்து கிரிக்கெட்டிலும் உள்நாட்டில் மிகச் சிறப்பான செயல்பாட்டை கொண்டு இருக்கிறார். 44 முதல் தர போட்டிகளில் 65 இன்னிங்ஸ்களில் 58 ரன் ஆவரேஜில், 3109 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் 20 அரைச்சதங்கள் மற்றும் ஏழு சதங்கள் அடக்கம். இடது கை வீரர் என்பதால் மிடில் வரிசையில் இந்திய கிரிக்கெட்டுக்கு உதவியாக இருக்கும்.

தேவ்தத் படிக்கல் :

கர்நாடக இளம் வீரரான இவர் 2003 க்கு பிறகு சிறப்பான செயல்பாட்டை உள்நாட்டு கிரிக்கெட்டில் வெளிப்படுத்தி வருகிறார். வெள்ளைப் பந்து உள்நாட்டு தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட இவர், தற்போது சிவப்புப்பந்து தொடர்களிலும் சதங்கள் அடிக்க ஆரம்பித்து விட்டார். சமீபத்தில் ரஞ்சி தொடரில் இவரது பேட்டில் இருந்து ரன்கள் கொட்டுகிறது. இவரால் பேட்டிங் வரிசையில் எந்த இடத்திலும் வேண்டுமானாலும் விளையாட முடியும் என்பது சிறப்பு. இடது கை வீரராக இருப்பதாலும், தற்பொழுது உள்நாட்டில் சிவப்புப்பந்து தொடர்களில் தொடர்ந்து விளையாடுவதாலும், இவர் பெயரும் இருக்கிறது.

சர்ப்ராஸ் கான் மும்பை :

ரஞ்சி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக டன் கணக்கில் கடந்த இரண்டு சீசன்களாக ரன்கள் குவித்து தள்ளியிருக்கிறார். ஆனால் கடந்த ஆண்டு இவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த பொழுது, இவர் களத்தில் காட்டும் ஆக்ரோஷத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறி தேர்வுக்குழு இவரை புறக்கணித்தது. இந்த நிலையில் இந்திய ஏ அணியில் இடம் பெற்று விளையாடி வரும் இவரது செயல்பாடு திருப்தியாக இல்லை என்பது பின்னடைவு.

ரகானே மற்றும் புஜாரா :

உள்நாட்டு ரஞ்சி டெஸ்ட் தொடரில் ரகானே மும்பைக்கும் புஜாரா சௌராஷ்ட்ராவுக்கும் விளையாடி வருகிறார்கள். இதில் ரகானே இரண்டு கோல்டன் டக் அடித்திருக்கிறார். ஆனால் புஜாரா இரட்டை சதம் வரை அடித்து அமர்க்களப்படுத்திக் கொண்டிருக்கிறார். விராட் கோலி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இடம் பெற மாட்டார் என்பதற்காக, இந்த மூத்த வீரர்களை மீண்டும் கொண்டு வரமாட்டார்கள். கொண்டு வந்து ஏதாவது இவர்கள் எடுத்தால், புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் தடை ஏற்பட்டு விடும். எனவே இளம் வீரர்கள் யாருக்காவது வாய்ப்பு தருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்