6 பந்து 20 ரன்.. 6,4,6,0,1,6.. ஜிம்பாப்வே அதிரடி வெற்றி.. இலங்கை கடைசியில் பரிதாப தோல்வி

0
618
Zimbabwe

தற்பொழுது ஜிம்பாப்வே ஆண்கள் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. முதலில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இலங்கை கைப்பற்றி இருந்தது.

இந்த நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியை இலங்கை வென்று இருக்க, இன்று தொடரின் இரண்டாவது போட்டி கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.

- Advertisement -

இலங்கைக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் பதும் நிசாங்கா, கேப்டன் குசால் மெண்டிஸ், குசால் பெரேரா மற்றும் சமரவிக்கிரமா என நான்கு விக்கெட்டுகள் முதல் ஐந்து ஓவரில் 27 ரன்களுக்கு விழுந்துவிட்டது.

இதற்கு அடுத்து சரி அசலங்கா உடன் அனுபவ வீரர் அஞ்சலோ மேத்யூஸ் இணைந்து இருவரும் அணியை மீட்டு எடுக்க ஆரம்பித்தார்கள். இந்த ஜோடி ஆரம்பத்தில் பொறுமை காட்டி 15 ஓவருகளுக்கு பிறகு அதிரடி காட்டியது.

சிறப்பாக விளையாடிய சரித் அசலங்கா 39 பந்துகளில் ஐந்து பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 69 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 118 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது.

- Advertisement -

இறுதி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்ற அஞ்சலோ மேத்யூஸ் 51 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 66 ரன்கள் எடுத்தார். ஜிம்பாப்வே தரப்பில் முசர்பானி மற்றும் ஜாங்வி இருவரும் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினார்கள்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணிக்கு கிரேஜ் எர்வின் 54 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் இரண்டு சிக்ஸர்கள் உடன் 70 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவருடன் இணைந்து விளையாடிய பிரையன் பென்னெட் 25 ரன்கள் எடுத்தார். நம்பிக்கை வீரர்கள் கேப்டன் சிக்கந்தர் ராஸா 8, சீன் வில்லியம்ஸ் 1, ரியான் பர்ல் 13 என ஆட்டமிழக்க ஜிம்பாப்வே வெற்றி கேள்விக்குறியானது.

கடைசி இரண்டு ஓவர்களுக்கு 30 ரன்கள் தேவை என்ற நிலையில், ஜாங்வே மற்றும் மடன்டே இருவரும் களத்தில் நின்றார்கள். 19ஆவது ஓவரை வீசிய மதுசங்கா 10 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

இதற்கு அடுத்து 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி ஓவரை அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் வீசுவதற்கு வந்தார். அப்போது பேட்டிங் முனையில் மடன்டே இருந்தார். முதல் பந்தை மேத்யூஸ் நோ-பால் ஆக வீச பந்து சிக்ஸருக்கு பறந்தது. அடுத்தடுத்த இரண்டு பந்துகள் பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் பறந்தது.

இதனால் முதல் இரண்டு பந்துகளிலேயே 17 ரன்கள் வந்துவிட்டது, இதற்கு அடுத்து வெற்றிக்கு நான்கு பந்துகளில் மூன்று ரன்கள் தேவைப்பட்டது. அடுத்த பந்து டாட் பந்தாக விழ மூன்று பந்துக்கு மூன்று ரன்கள் தேவைப்பட்டது. அப்பொழுது மடன்டே ஒரு ரன் எடுக்க, இரண்டு பந்துகளில் இரண்டு ரன்கள் தேவை என்ற நிலையில், ஜாங்வே சிக்ஸர் அடித்து ஆட்டத்தை வெற்றிகரமாக கொடுத்து விட்டார்.

பரபரப்பான இந்த போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்று தொடரை சம நிலையில் வைத்திருக்கிறது. தொடரை நிர்ணயிக்கும் மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி அடுத்து நடக்க இருக்கிறது.