இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் தனி ஒரு வீரராக புது சரித்திரம் படைத்திருக்கிறார்!
இந்தப் போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்று பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் ஜெட்ரன் 129 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்தபடியாக ரஷித் கான் அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார்.
பேட்டிங் செய்ய கொஞ்சம் சாதகம் இருக்கும் மும்பை ஆடுகளத்தில் இரண்டாவதாக களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு எதிர்பார்க்காத விதமாக மிகப்பெரிய சரிவு உண்டானது.
அந்த அணியின் டிராவிஸ் ஹெட் 0, டேவிட் வார்னர் 18, மிட்சல் மார்ஸ் 24, லபுஷன் 14, இங்லீஷ் 0, ஸ்டாய்னிஸ் 6, மிட்சல் ஸ்டார்க் 3 என முதல் ஏழு விக்கெட்டுகள் 91 ரன்களுக்கு சரிந்தது.
இந்த நிலையில் விளையாடிக் கொண்டிருந்த மேக்ஸ்வெல் கொடுத்த ஒரு எளிய கேட்ச் வாய்ப்பை முஜீப் தவறவிட்டார். அவர் தவறவிட்டது கேட்ச்சை அல்ல மேட்ச்சை என்று மேக்ஸ்வெல் அதற்குப் பிறகு தனது ருத்ரதாண்டவத்தில் காட்டினார்.
இதற்கு மேற்கொண்டு விக்கெட் விழவே கிடையாது. தனி ஆளாக அதிரடியில் மிரட்டிய மேக்ஸ்வெல் 76 பந்துகளில் சதம் அடித்தார். இதற்கு அடுத்து தசைப்பிடிப்பு ஏற்பட்டு ரன் ஓட முடியாத நிலைமையில் சுதாரித்து விளையாடினார்.
காயம் பட்டும் கூட அவரது ஆட்டத்தில் அதிரடி குறையவில்லை என்பதுதான் ஆச்சரியமான விஷயம். மேற்கொண்டு 52 பந்துகளை மட்டும் சந்தித்து அடுத்த சதத்தையும் அடித்தார். இன்றைய போட்டியில் ஆட்டம் இழக்காமல் அவர் 21 பவுண்டரிகள் 10 சிக்ஸர்களுடன் 201 ரன்கள் குவித்து, 46.5 ஓவரில் ஆஸ்திரேலியா அணியை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் பிரமிக்கத்தக்க வெற்றியை பெற வைத்தார்.
மேக்ஸ்வெல் கம்மின்ஸ் ஜோடி ஒட்டுமொத்தமாக 202 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இந்தப் பார்ட்னர்ஷிப்பில் கம்மின்ஸ் எடுத்த ரன்கள் 68 பந்துகளில் வெறும் 12 ரன்கள் மட்டுமே. அந்த அளவிற்கு தனி ஒரு வீரராக ஆப்கானிஸ்தான் அணியை ஒட்டுமொத்தமாக சிதைத்து விட்டார். மேலும் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் சேஸ் செய்யும் பொழுது அடிக்கப்பட்ட முதல் இரட்டை சதம் இதுவாகும்!
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி மூன்றாவது அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அரையிறுதிக்கு செல்ல இருந்த ஒரு அருமையான வாய்ப்பை ஆப்கானிஸ்தான் தவற விட்டுவிட்டது என்று சொல்லலாம். ஆனாலும் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் தோற்று தனது கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றால் ஒரு வாய்ப்பு இருக்கிறது!