நல்ல பார்மில் இருந்தும் 2022 டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைக்காத 5 வீரர்கள்!

0
1977
Sanju

டி20 உலகக் கோப்பை வருகின்ற அக்டோபர் நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மீதி நான்கு அணிகளுக்கான போட்டியில் 8 அணிகள் பங்கு பெறுகின்றன. தகுதி சுற்றின் முடிவில் 12 அணிகளை 2 குழுக்களாகப் பிரித்து, அதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளைக் கொண்டு அரையிறுதிப் போட்டிகளும், இறுதிப் போட்டியும் நடத்தப்படும்.

தற்போது ஒவ்வொரு அணிகளும் தங்களின் 15 பேர் கொண்ட டி20 உலகக் கோப்பைக்கான அணியை அறிவித்து உள்ளது. வருகின்ற அக்டோபர் 9ஆம் தேதி வரை, இதில் ஏதாவது மாற்றங்கள் தேவை என்றால் செய்து கொள்ளலாம். இந்த 15 பேர் கொண்ட உலக கோப்பை அணியில் நல்ல பார்மில் இருந்தும், தங்கள் நாட்டுக்காக இடம் பெற முடியாத ஐந்து வீரர்கள் யார் யாரென்று தான் இந்த கட்டுரை தொகுப்பில் பார்க்கப்போகிறோம்.

- Advertisement -

சஞ்சு சாம்சன் இந்தியா :

வலதுகை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான இவர் டி20 போட்டிகளுக்கு மிகவும் பொருத்தமான வீரர். தற்போது பொறுப்பான முறையில் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கேப்டனாக இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இறுதிப்போட்டிக்கு கொண்டு சென்றார். மேலும் அயர்லாந்துக்கு எதிராக கிடைத்த ஒரு வாய்ப்பில் டி20 போட்டியில் அரைசதம் அடித்து இருந்தார். மேலும் இந்திய ஒரு நாள் போட்டி அணியில் இடம் பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனாலும் இவருக்கு இந்திய டி20 உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்கவில்லை.

கேமரூன் கிரீன் ஆஸ்திரேலியா :

- Advertisement -

ஆஸ்திரேலியாவின் இளம் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர். இவருக்கு ஆஸ்திரேலியா டி20 உலக கோப்பை அணியில் இடம் கிடைக்கவில்லை. உலகக்கோப்பை அணியை அறிவித்த பிறகு, ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இந்தியா வந்தது. இந்த தொடரில் வார்னருக்கு பதிலாக துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய இவர் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை தனது அதிரடியால் மிரட்டி எடுத்து விட்டார். இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் அதிவேக அரை சதம் அடித்தவர் என்ற சிறப்பையும் பெற்றார். அக்டோபர் 9 ஆம் தேதிக்குள் ஏதாவது இவரது விஷயத்தில் மாற்றங்கள் நடக்க வாய்ப்பு இருக்கிறது.

முகமது ஆமிர் பாகிஸ்தான் :

புதுப் பந்தில் மிகச்சிறப்பாக ஸ்விங் மற்றும் வேகமாக வீசி பேட்ஸ்மேன்களை தடுமாற வைப்பவர். சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிராக விளையாடி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர். தற்போது இவர் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடக்கும் கரீபியன் கிரிக்கெட் லீக் தொடரில் மிகச் சிறப்பாக பந்து வீசி 13 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இவருக்கு பாகிஸ்தான் உலகக்கோப்பை அணியில் இடம் இல்லை.

பாப் டு பிளிஸிஸ் சவுத் ஆப்பிரிக்கா :

முன்னாள் சவுத்ஆப்பிரிக்கா கேப்டனான இவர் உலகம் முழுவதும் நடந்து வரும் டி20 லீக்குகளில் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது சவுத் ஆப்பிரிக்கா நாட்டில் நடக்க இருக்கும் ஐபிஎல் மாதிரியான டி20 தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியுள்ள ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் இவருக்கும் சவுத் ஆப்பிரிக்கா டி20 உலக கோப்பை அணியில் இடமில்லை.

பென் டக்கெட் இங்கிலாந்து :

தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் நாட்டில் விளையாடி வருகிறது. இதில் நான்கு ஆட்டங்களில் 167 ரன்கள் குவித்து மிகச் சிறப்பான பேட்டிங் பார்மில் இவர் இருக்கிறார். ஆனால் இந்த இடதுகை வீரருக்கு இங்கிலாந்து டி20 உலக கோப்பை அணியில் இடமில்லை.