ஐ.பி.எல் தொடர் என்பது இந்திய இளம் கிரிக்கெட் திறமைகளைக் கண்டறிவதற்கு என்பதையும் தாண்டி, இந்திய அணியில் இடத்தை இழந்த வீரர்கள் அணிக்குள் திரும்பி வருவதற்கும், வெளிநாட்டு வீரர்கள் தங்கள் திறமையைத் நிரூபித்து அவர்களின் தேசிய அணிக்கு மீண்டும் திரும்புவதற்கும் பெரும் உதவியாக இருக்கிறது. இந்த ஐ.பி.எல் தொடர் மூலம் இந்திய அணிக்கும், சில வெளிநாட்டு அணிகளுக்கும் திரும்ப வாய்ப்புள்ள வீரர்கள் யார் யாரென்று பார்ப்போம்!
ஹர்திக் பாண்ட்யா
முதுகில் ஏற்பட்ட காயத்தால் கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கி இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டவர், 2021 இருபது ஓவர் உலகக்கோப்பையில் இந்திய அணிக்குத் திரும்பினார். ஆனால் அவரது உடற்தகுதியும், செயல்பாடும் திருப்தியாக அமையவில்லை. இந்திய அணியும் முதல் சுற்றோடு வெளியேறி இருந்தது. அடுத்து ஹர்திக் பாண்ட்யாவே தான் உடற்தகுதியை மேம்படுத்த வேண்டுமென்றும், அதுவரையில் அணியில் தன்னைச் சேர்க்க வேண்டாமென்றும் கூறி, உடற்தகுதியில் கவனம் செலுத்தினார்.
இதற்கடுத்து நடப்பு ஐ.பி,எல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக தேர்வுசெய்யப்பட்டவர் பேட்டிங் பவுலிங் என கலக்கியதோடு, அணியையும் ப்ளேஆப்ஸ் சுற்றுக்குள் கம்பீரமாக அழைத்துச் சென்றிருக்கிறார். இந்தத் தொடரில் 11 ஆட்டங்களில் 344 ரன்களை 38.22 சராசரியில் அடித்திருக்கும் இவர், அடுத்து தென்ஆப்பிரிக்க உடனான இருபது ஓவர் போட்டி தொடரில் இந்திய அணியில் இடம்பெறுவதோடு, ரோகித், ராகுல், ரிஷாப்புக்கு ஓய்வு தரப்படுவதால், இந்திய அணியை வழிநடத்தவும் செய்யலாம்!
பனுகா ராஜபக்சே
இலங்கை அணிக்காக இருபது ஓவர் போட்டிகள் சிலவற்றில் அதிரடியாக விளையாடி, இலங்கை கிரிக்கெட் இரசிகர்களின் நம்பிக்கையைப் பெற்றவர். ஆனால் இவர் உடற்தகுதி சரியில்லாததால் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. சமீபத்தில் ஓய்வை அறிவித்து பின்பு அதனை திரும்ப பெற்றிருந்தார். தற்போது பஞ்சாப் அணிக்காக நம்பர் 3ல் இறங்கி அதிரடியாக எட்டு ஆட்டங்களில் 202 ரன்களை, 162 என்ற பெரிய ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருக்கிறார். இது இவரை மீண்டும் இலங்கை அணிக்குள் கொண்டுவரலாம்.
தினேஷ் கார்த்திக்
ஐ.பி.எல்-ல் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்து, பின்பு விலகி வீரராகத் தொடர்ந்த இவரை, கொல்கத்தா அணி நிர்வாகம் இந்த முறை தக்கவில்லை. அவர்களுக்குப் பதில் சொல்லும் விதமாய், தன் உச்சக்கட்ட பினிசிங் பேட்டிங் பார்மில் இருக்கிறார். இந்தத் தொடரில் 13 ஆட்டங்ளில் பினிசராய் 285 ரன்களை விளாசியதோடு, அதை 192 என்ற அபாரமான ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருக்கிறார். அடுத்து தென்ஆப்பிரிக்கா உடனான இருபது ஓவர் போட்டி தொடரில், நட்சத்திர இந்திய வீரர்களுக்கு ஓய்வளிக்கப் படுவதால் இவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
சிம்ரன் ஹெட்மயர்
இந்த கரீபிய அதிரடி வீரர் உடற்தகுதியின் காரணமாக வெஸ்ட் இன்டீஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். டெல்லி அணிக்காக விளையாடி வந்த இவரை, இந்த வருடம் ராஜஸ்தான் அணி பினிசர் ரோல் செய்வதற்காக மட்டுமே வாங்கியது. அதை இவர் 100% சரியாகவே செய்திருக்கிறார் என்றே கூறலாம். இந்தத் தொடரில் 11 ஆட்டங்களில் 72.75 சராசரியில் 166 ஸ்ரைக்ரேட்டில் நொறுக்கி இருக்கிறார். கரீபிய கேப்டன் பொலார்ட் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருப்பது, இவரின் தேசிய அணிக்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது.
டிவால்ட் பிரிவிஸ்
பேபி ஏ.பி.டிவிலியர்ஸ் என்று புகழப்படும் அளவிற்கு, டீன்ஏஜ்ஜின் இறுதியில் இருக்கும் இந்த தென்ஆப்பிரிக்க இளைஞனின் பேட்டிங் அவரைப்போலவே உள்ளது. திறமைக்கு எந்தப் பஞ்சமும் இல்லை. ஆனால் தொடர்ச்சியாய் திறமையை வெளிப்படுத்துவதற்கான அனுபவம்தான் குறைவாய் இருக்கிறது. இவரை எதிர்காலத்திற்காகப் பட்டை தீட்டும் பொருட்டு, வெகு சீக்கிரத்தில் தென்ஆப்பிரிக்க அணியில் சேர்க்கப்படலாம்!