இந்திய அணியில் இடம் கிடைத்து ஆனால் விளையாடும் வாய்ப்பு கிடைக்காத 5 திறமையான வீரர்கள்!

0
413
ICT

இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம், இந்திய அணியை வைத்து அதிக போட்டிகளில் விளையாட, நிறைய புதிய வீரர்களை அணிக்குள் கொண்டு வருகிறது.

மேலும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு இரண்டு இந்திய அணியை உருவாக்குவதில் தனிக் கவனம் செலுத்தப்படுகிறது. காரணம் இந்தியாவில் கிரிக்கெட் பெரிய அளவில் வருமானத்தை தரக்கூடிய ஒரு விளையாட்டு. இதனால் ஒரே வீரர்களை வைத்து அதிக போட்டிகளில் விளையாட முடியாது. எனவே அதிகப்படியான புதிய வீரர்களுக்கும், சர்வதேச அனுபவம் உள்ள பழைய வீரர்களுக்கும் வாய்ப்புகள் தரப்படுகிறது.

இந்த வகையில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு ஆனால் ஆடும் வாய்ப்பு வழங்கப்படாத 5 இந்திய வீரர்கள் யார் என்றுதான் இந்தக் கட்டுரைத் தொகுப்பில் நாம் பார்க்க இருக்கிறோம்!

சாய் கிஷோர்:

தமிழகத்தைச் சேர்ந்த இந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர், தான் வீசும் பந்துவீச்சு வகையில் மிகவும் திறமையான ஒரு வீரர். மேலும் பேட்டிங்கில் ஓரளவுக்கு பங்களிப்பு செய்யக்கூடியவர். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பெற்று விளையாடும் வாய்ப்பையும் பெற்றவர். இவருக்கு கடந்த ஆண்டு இலங்கை அணியுடனான டி20 தொடரின்போது இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் விளையாடும் வாய்ப்பு அமையவில்லை. கூடிய விரைவில் இவர் இந்திய அணிக்கு விளையாடுவார்!

ராகுல் திவாட்டியா:

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக பினிஷிங் ரோலில் எல்லோரையும் ஆச்சரியப்படுத்திய லெக் ஸ்பின் ஆல்ரவுண்டர். 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற டி20 தொடரில் இவர் அணிக்குள் அழைக்கப்பட்டார். ஆனால் ஆடும் அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

சிமர்ஜீத் சிங் :

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் இந்த வலது கை வேகப்பந்து வீச்சாளர் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் தொடர்ச்சியாக வீசும் திறன் பெற்றவர். இவருக்கு கடந்த ஆண்டு இலங்கை சென்ற இந்திய அணியில் இடம் கிடைத்தது. ஆனால் ஒரு ஆட்டத்தில் கூட விளையாடும் வாய்ப்பு அமையவில்லை.

பிரியங்க் பன்சால் :

இந்திய உள்நாட்டு டெஸ்ட் தொடர்களில் அற்புதமான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி வரும் இந்த வீரருக்கு, இந்திய டெஸ்ட் அணியில் மூன்றாவது தொடக்க ஆட்டக்காரராக வாய்ப்பு அமைகிறது. ஆனால் விளையாடும் வாய்ப்புதான் கிடைக்கவில்லை.

பசில் தம்பி:

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வரும் இந்த வலது கை வேகப்பந்து வீச்சாளருக்கு 2017 ஆம் ஆண்டு இந்திய அணியில் இலங்கைக்கு எதிரான தொடரில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இவருக்குப் பிறகு பல வீரர்களுக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்க இவருக்கு விளையாடும் வாய்ப்பு இந்திய அணியில் கிடைக்கவே இல்லை!