அயர்லாந்து தொடரில் வாய்ப்பு கிடைக்காத 5 ஹை கிளாஸ் இந்திய வீரர்கள்!

0
468
ICT

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை முடித்துக் கொண்டு அடுத்து ஆகஸ்ட் 18, 20 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் போன ஐந்து வீரர்கள் யார்? என்று இந்த கட்டுரை தொகுப்பில் பார்ப்போம்.

அயர்லாந்து டி20 தொடருக்கான இந்திய அணி ; பும்ரா (கே), ருதுராஜ் (து. கே) யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் மற்றும் ஆவேஷ் கான்.

- Advertisement -

சாய் சுதர்சன் :

தமிழக மாநில அணிக்கும், ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அனைத்தும் விளையாடி வரும் இடது கை பேட்ஸ்மேன். சீனியர் வீரர்களை போல பொறுப்பு எடுத்துக்கொண்டு சூழ்நிலைக்கு தகுந்தவாறு விளையாடுவதில் மிகவும் முதிர்ச்சி அடைந்து காணப்படுகிறார். ஐபிஎல் தொடருக்கு அடுத்து இந்திய உள்நாட்டு தொடர்களிலும், இளையோருக்கான ஆசியக் கோப்பை தொடரிலும் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்திய அணியில் எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் விளையாடுவதற்கான திறமை இருந்தும் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

ராகுல் திரிபாதி :

- Advertisement -

கடந்த முறை அயர்லாந்துக்கு இந்திய அணி டி20 கிரிக்கெட் தொடர் விளையாட சுற்றுப்பயணம் செய்த பொழுது இவரும் இடம் பெற்று இருந்தார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் இவரது பேட்டிங் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. மேலும் அயர்லாந்து தொடருக்குப் பிறகு நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியில் இவரது பெயர் இருக்கிறது. ஆனால் அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியில் இல்லை. எந்தவித சுயநலமும் இல்லாமல் ரன் தேவைக்காக விக்கெட்டை பணயம் வைத்து, அதிரடியாக ஆடக்கூடியவர். இவருக்கான வாய்ப்பும் மறுக்கப்பட்டு இருக்கிறது.

வருண் சக்கரவர்த்தி :

தமிழக வீரரான இவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு விளையாடி வருகிறார். இந்த முறை தனது பந்துவீச்சில் மிக முக்கியமாக வேகத்தை அதிகரித்து மிகச் சிறப்பான முறையில் திரும்பி வந்திருந்தார். தேவைப்படும் பொழுது பவர் பிளேவில் வந்து பந்து வீசியதோடு, இறுதிக்கட்ட ஓவர்களிலும் மிகச் சிறப்பான முறையில் பந்து வீசி இருந்தார். இந்த காரணத்தினால் இவருக்கு ஏதாவது ஒரு இடத்தில் டி20 தொடரில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவரை எந்த ஒரு இடத்திலும் இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு கண்டுகொள்ளவில்லை.

ராகுல் திவாட்டியா :

வலது கை சுழற் பந்துவீச்சு, இடது கை பேட்டிங் செய்யும் ஆல்ரவுண்டர். குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக பினிஷிங் ரோலில் கடந்த இரு வருடங்களாக மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். இவர் களத்திற்குள் வந்தால் எதிரணிகள் வெற்றி என்பதை கடைசிப் பந்து வரைக்கும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கிறது. கடந்த வருடமே இவருக்கு வாய்ப்பு தரப்பட வேண்டும் என்ற பேச்சுகள் எழுந்த நிலையில், இந்த முறையும் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கிறது.

மோகித் சர்மா :

ஐபிஎல் தொடரில் சாம்பியன் ஆக இருந்த சென்னை அணியில் விளையாடி, இந்திய அணியில் இடம் பிடித்து உச்ச நிலைக்கு சென்ற பந்துவீச்சாளர். ஆனால் திடீரென ஃபார்ம் சரிந்து ஐபிஎல் தொடரில் யாரும் ஏலம் எடுக்கப்படாத நிலைக்குப் போனார். அந்தச் சூழ்நிலையிலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கடந்த வருடம் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக வந்து, இந்த வருடம் 50 லட்சம் ரூபாய்க்கு அதே அணியில் இடம்பெற்று, விளையாடும் அணியில் ஒரு வாய்ப்பு கிடைக்க, அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு, மொத்தம் 14 ஆட்டங்களில் 25 விக்கெட் வீழ்த்தி அசர வைத்தார். மீண்டும் இவருக்கு டி20 இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை!