ஓடிஐ உலகக் கோப்பையில் விளையாடிய 5 தந்தை மகன்கள்.. 2023 உலக கோப்பையில் யார்?

0
403
Odiwc2023

இந்தியாவில் அக்டோபர் ஐந்தாம் தேதி ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டியின் மூலம் துவங்குகிறது.

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை தந்தை மகன்கள் 5 பேர் விளையாடி இருக்கிறார்கள். இந்தியாவில் நடக்க இருக்கும் உலகக் கோப்பையிலும் ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் விளையாடி இருப்பவரின் மகன் ஒருவர் விளையாடுகிறார்.

- Advertisement -

ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் விளையாடிய ஐந்து தந்தை மகன்கள் யார்? தற்போது அப்படி இந்தியாவில் நடக்க இருக்கும் உலக கோப்பையில் விளையாட வாய்ப்பிருக்கும் மகன்கள் யார்? என்று இந்த சிறிய கட்டுரை தொகுப்பில் பார்ப்போம்!

ஜெப் மார்ஸ் – மிட்சல் மார்ஸ்

1987 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வென்ற அணியில் ஜெப் மார்ஸ் இடம்பெற்று எட்டு ஆட்டங்களில் இரண்டு சதங்கள் உடன் 428 ரன்கள் எடுத்து, அந்த உலகக் கோப்பை தொடரில் அதிக ரன் எடுத்தவர்களில் மூன்றாவது இடத்தை பிடித்தார். இவரது மகன் மிட்சல் மார்ஸ் 2015 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணியில், மைக்கேல் கிளார்க் தலைமையிலான அணியில் இடம் பெற்று விளையாடினார். மேலும் 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை ஆஸ்திரேலியா அணியிலும் இடம் பெற்று இருந்தார். இவருடைய சொந்த அண்ணன்தான் ஷான் மார்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ரோஜர் பின்னி – ஸ்டூவர்ட் பின்னி

1983 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை கபில்தேவ் தலைமையில் வென்ற இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி, 18 விக்கட்டுகளை வீழ்த்தி முக்கிய வீரராக ரோஜர் பின்னி விளங்கினார். தற்பொழுது இவர் கங்குலிக்கு பிறகு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகப் பொறுப்பில் இருக்கிறார். இவரது மகனான ஸ்டுவர்ட் பின்னி 2015 ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்திய அணியில் மகேந்திர சிங் தோனி தலைமையின் கீழ் இடம் பெற்று இருந்தார். ஆனால் விளையாடும் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

கெவின் கரன் – டாம் கரன்

கெவின் கரன் 1983 மற்றும் 87 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணிக்காக பங்கேற்று விளையாடி இருக்கிறார். இவரது மகன் டாம் கரன் 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் இடம் பெற்று விளையாடினார். இவரது இளைய சகோதரர்தான் சாம் கரன்.

கிறிஸ் பிராட் – ஸ்டூவர்ட் பிராட்

1987 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் கோப்பையை பறிகொடுத்த இங்கிலாந்து அணியில் கிறிஸ் பிராட் இடம் பெற்று இருந்தார். இவரது மகனான ஸ்டூவர்ட் பிராட் 2007, 11 மற்றும் 15 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை இங்கிலாந்து அணியில் இடம் பெற்று இருந்தார்.

ராட் லாதம் – டாம் லாதம்

ராட் லாதம் 1992 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியில் இடம்பெற்று இருந்தார். இவரது மகனான விக்கெட் கீப்பிங் இடது கை பேட்ஸ்மேன் டாம் லாதம் 2015 மற்றும் 19ஆம் ஆண்டு நியூசிலாந்து ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை அணியில் இடம் பெற்று விளையாடி இருந்தார்.

தற்போது இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் நெதர்லாந்து அணி விளையாட தகுதி பெற்று இருக்கிறது. இந்த அணியில் பாஸ் டி லீட் முக்கியமான ஆல்ரவுண்டராக இருக்கிறார். இவர் இந்த உலகக்கோப்பையில் விளையாடுவது உறுதி. இவரது தந்தை டிம் டி லீட் நெதர்லாந்து அணிக்காக 1996 2003 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைகளில் விளையாடியிருக்கிறார்.

மேலும் கெவின் கரனின் மகனும் டாம் கரனின் இளைய சகோதரருமான சாம் கரன் இங்கிலாந்து அணிக்காக இந்த முறை நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது.