இந்திய அணியில் ஆடிய 5 தமிழக வேகப்பந்து வீச்சாளர்கள்

0
2481
Lakshmipathy Balaji and Thangarasu Natarajan

தமிழகத்தைச் சேர்ந்த பல வீரர்கள் சர்வதேச அளவில் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளனர். நம் மண்ணின் மைந்தன் ரவிச்சந்திரன் அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளுக்கு மேல் கைபற்றி சாதனை படைத்தார். தமிழ்நாடு பிரீமியர் லீக் மூலம் புதிய இளம் வீரர்கள் வளர்ந்து வருகிறார்கள். நம் மாநிலத்தில் இருந்து எதேனும் ஒரு வீரர் பெரிதாக சாதித்தால், அது நமக்கும் பெருமை தான்.

எந்த ஒரு அணிக்கும் சிறப்பான தொடக்கம் மிக அவசியம். அது சரியாக அமைந்துவிட்டால் அடுத்தடுத்த நிகழ்வுகள் நன்றாக நடக்கும். பெரும்பாலும், எதிரணியின் தொடக்கத்தை சீர்குலைக்க செய்வது வேகப்பந்து வீச்சாளர்களின் கைகளில் தான் உள்ளது. ஸ்பின்னர்களை விட வேகப்பந்து வீசும் பவுலர்களுக்கே பணிச்சுமை அதிமாக இருக்கும். இக்கட்டுரையில், தமிழகத்தைச் சேர்ந்த 5 பிரபல வேகப்பந்து வீச்சாளர்களைப் பற்றி பார்ப்போம்.

1.டிஏ சேகர் – 1982

ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக ஆடிய முதல் தமிழக வேகப்பந்து வீச்சாளர் இவரே. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மதன் லாலுக்கு காயம் ஏற்ப்பட்டது. அவருக்கு பதிலாக மாற்று வீரராக டிஏ சேகர் அழைக்கப்பட்டார். அதன் பின்னர், தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் பங்கேற்றார். ஒருநாள் போட்டிகளில் வெறும் 5 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார். அவரது சிறந்த பந்துவீச்சு 3/23. துரதஸ்டவசமாக அவரின் கிரிக்கெட் வாழ்க்கை இத்துடன் முடிவடைந்தது. தன் திறனை நிரூபிக்க அவருக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது தான் கசப்பான உண்மை.

2.பரத் அருண் – 1986

இப்படியலில் இருக்கும் மற்றொரு 20வது நூற்றாண்டைச் சேர்ந்த தமிழக பந்துவீச்சாளர், பரத் அருண். சேகரைப் போல இவரும் பெரிதாக சாதிக்கவில்லை. 1986 – 87களில் இவர் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக தலா ஒரு போட்டியில் விளையாடி உள்ளார். சோகமான விசியம் என்னவென்றால் பரத் அருண், தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் கேரியரில் வெறும் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார். Oஜூலை 2017ல் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருண் நியமிக்கப்பட்டார். இன்னுமும் அவர் பணியில் தான் உள்ளார்.

3.டி குமரன் – 1999

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில், டி குமரன் பிறந்தார். 1999ம் ஆண்டு நடந்த இராணி கோப்பையில் மிக அற்புதமாக பந்துவீசி அனைவரது கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்தார். முதன் முதலில் கார்ல்டன் ஒருநாள் தொடரில் விளையாட அவரை அழைத்தனர். கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி, 8 போட்டிகளில் 9 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அவரது சிறந்த பந்துவீச்சு 3/24 ஆகும்.

அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் அஜித் அகர்க்கர், ஜாகீர் கான் போன்ற வீரர்கள் இந்திய அணிக்குள் நுழைய இவரின் இடம் பறிபோனது. மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் நோக்கத்தில் ஐசிஎல் தொடர் ஆடச் சென்றார். அறிமுகப் போட்டியிலேயே 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். ஆனால் இந்திய அணிக்கு அவரால் மீண்டும் வருகைத் தர வாய்ப்புக் கிட்டவில்லை.

4.லட்சுமிபதி பாலாஜி – 2003

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடிய பாலாஜி, 2003ல் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகினார். அதன் பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 12 விக்கெட்டுகள் வீழ்த்தி அற்புதமாக செயல்பட்டார். 2004ம் ஆண்டு இந்திய அணி பாகிஸ்தான் மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை வென்றது. அதில் பாலாஜியின் பங்கும் அடங்கும்.

அவரின் எதிர்காலம் ஒளிமயமாக இருந்தது. முதல் ஐ.பி.எல் சீசனில் சென்னை அணிக்காக அருமையான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். மேலும், இந்தியன் பிரீமியர் லீக்கில் ஹாட்ரிக் சாதனை படைத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் பெற்றார். ஆனால், பல காயங்கள் இவரின் வாழ்கையை புரட்டிபொட்டது. தன்னுடைய முழு திறனையும் அவர் வெளிப்படுத்தவில்லை.

5.நடராஜன் – 2020

சின்னப்பம்பட்டி முதல் சிட்னி வரை கலக்கிய வீரர், தங்கராசு நடராஜன். தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் அவரின் செயல்பாட்டின் மூலம் ஐ.பி.எலில் பஞ்சாப் அணி இவரை வாங்கியது. அவ்வருடம் நடராஜனுக்கு பெரிதாக வாய்ப்புக் கிடைக்கவில்லை. கடுமையாக உழைத்து விடாமுயற்சியுடன் போராடினார். 2020 ஐ.பி.எலில் புவனேஸ்வர் குமார் காயம் காரணமாக வெளியேறினார். அவரின் இடத்தை நடராஜன் நிரப்பினார்.

ஜஸ்பிரித் பும்ராவைப் போல யார்க்கர் ஸ்பெசலிஸ்ட் ஆக உயர்ந்தார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் நடராஜன் தேர்வானார். டெஸ்ட், ஓடிஐ மற்றும் டி20 என மூன்று ஃபார்மட்டிலும் தன்னுடைய கால்தடத்தைப் பதித்தார். மொத்த தமிழ்நாடும் பெருமைக் கொண்டது.