4-வது டெஸ்ட்.. மழையை மனதில் வைத்து பேட்டிங்கில் பேயாட்டம் ஆடும் இங்கிலாந்து!

0
3875
Ashes2023

இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இரண்டு வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட ஆசஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடந்து வருகிறது.

இந்தத் தொடரில் நடந்து முடிந்த மூன்று போட்டிகளில் 2 போட்டிகளை ஆஸ்திரேலியாவும், ஒரு போட்டியை இங்கிலாந்தும் வென்று இருந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் ஓல்ட் ட்ராப்போர்டு மைதானத்தில் தொடங்கியது. இதில் டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் முதல் இன்னிங்ஸில் மார்னஸ் லபுசேன் 51, மிட்சல் மார்ஸ் 51, டிராவிஸ் ஹெட் 48, ஸ்டீவன் ஸ்மித் 41 ரன்கள் எடுக்க முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 317 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இங்கிலாந்து தரப்பில் கிரீஸ் வோக்ஸ் 62 ரன்கள் தந்து ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து தமது முதல் இன்னிங்ஸ் விளையாடிய இங்கிலாந்துக்கு துவக்க ஆட்டக்காரர் பென் டக்கட் ஒரு ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த துவக்க ஆட்டக்கார ஜாக் கிரவுலி மற்றும் மொயின் அலி இருவரும் சேர்ந்து ஆஸ்திரேலியா பந்துவீச்சை விளாசி தள்ளி 121 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். மொயின் அலி 54 ரன்களில் வெளியேறினார்.

இதற்குப் பிறகுதான் ஆட்டம் இன்னும் சூடு பிடித்தது. ஜாக் கிரவுலி மற்றும் ஜோ ரூட் இருவரும் இணைந்து ஆஸ்திரேலியா பந்துவீச்சை ஒருநாள் கிரிக்கெட் விளையாடுவது போல அடித்து நொறுக்கி விட்டார்கள். மிகச் சிறப்பாக விளையாடிய ஜாக் கிரவுலி சதத்தை தாண்டி 150 ரன்களுக்கு மேல் எடுத்து, இறுதியாக 182 பந்துகளில் 21 பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 189 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 206 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதற்கு அடுத்து அதிரடியில் மிரட்டிய ஜோ ரூட் 90 பந்துகளில் எட்டு பவுண்டரி ஒரு சிக்ஸர் உடன் 84 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்து வெளியேறினார். தற்போது களத்தில் ஆட்டம் இழக்காமல் ஹாரி ப்ரூக் 14 மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 24 இருவரும் நிற்கிறார்கள்.

மொத்தம் 72 ஓவர்கள் மட்டுமே விளையாடிய இங்கிலாந்து 5.33 ரன்ரேட்டில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 384 ரன்கள் குவித்துள்ளது. இந்த போட்டியில் இறுதி நேரத்தில் மட்டுமே விக்கட்டை தர வேண்டாம் என்று இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் பொறுமை காட்டினர். ஆனால் ஆட்டம் முழுவதுமே அவர்கள் அதிரடியில் ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களை நோகடித்து விட்டார்கள்.

மூன்றாவது நாளான இன்று மழை வருவதற்கு சிறிய வாய்ப்பும், நான்காவது மற்றும் ஐந்தாவது நாளில் மழை வருவதற்கான அதிகபட்ச வாய்ப்பும் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே வென்று தொடரை தற்காலிகமாக சமன் செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்ற இங்கிலாந்து, அதற்காக ஆஸ்திரேலியா எதிர் பார்க்காத வகையில் அதிரடியில் விளையாடி மிரட்டி வருகிறது. நாங்கள் எப்பொழுதும் ட்ரா பற்றி யோசிக்கவே மாட்டோம் என்று இங்கிலாந்து ஏற்கனவே கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது!