குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இந்திய ஏ அணிக்கும், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கும் இடையே நான்குநாள் கொண்ட டெஸ்ட் போட்டி நடைபெற்றது.
அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்திய ஏ அணி முதலில் டாசில் வெற்றி பெற்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த அணியில் தமிழக வீரர்களான சாய் சுதர்சன் மற்றும் பிரதோஷ் ரஞ்சன் பால் இருவரும் இடம் பெற்று இருந்தார்கள். மேலும் ரஜத் பட்டிதார் இடம் பெற்றிருந்தார்.
இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு கீட்டன் ஜென்னிங்ஸ் 154, ஜோஸ் போகன் 125 ரன்கள் என இரண்டு வீரர்கள் அபாரமாக சதம் அடிக்க, இங்கிலாந்து லயன்ஸ் முதல் இன்னிங்சில் எட்டு விக்கெட் இழப்புக்கு 553 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய தரப்பில் மானவ் சுதார் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.
இதற்கடுத்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணிக்கு எல்லா பேட்ஸ்மேன்களும் ஏமாற்றம் தந்த நிலையில், ரஜத் பட்டிதார் மற்றும் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடிய 151 ரன்கள் குவித்தார். இந்தியா ஏ அணி 227 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதற்கடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்து மீண்டும் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 490 ரன்கள் என்கின்ற மெகா இலக்கு கொடுக்கப்பட்டது.
இதை நோக்கி நேற்று விளையாடிய இந்திய அணி மூன்றாம் நாள் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து தோல்வியின் பிடியில் இருந்தது. களத்தில் தமிழக வீரர் சாய் சுதர்ஷன் 53 ரன்கள், மானவ் சுதார் 1 ரன் எடுத்து நின்றார்கள்.
இன்று தொடர்ந்து நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் இந்த ஜோடி 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. 219 ரன்களுக்கு இந்திய ஏ அணி 5 விக்கெட் இழந்தது. அபாரமாக விளையாடிய சாய் சுதர்சன் 28 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து துரதிஷ்டவசமாக சதம் அடிக்க முடியாமல் ஆட்டம் இழந்தார்.
இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த மானவ் சுதார் மற்றும் கேஎஸ்.பரத் மிகச் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து, டெஸ்ட் கிரிக்கெட்டை அதற்கே உரிய முறையில் விளையாடியது.
மிகச் சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தார்கள். இதில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கே.எஸ்.பரத் ஆட்டம் இழக்காமல் 116 ரன்கள் குவித்தார். மானவ் சுதார் தன் பங்குக்கு ஆட்டம் இழக்காமல் 89 ரன்கள் எடுத்தார்.
490 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய ஏ அணி, ஐந்து விக்கெட் இழப்புக்கு 426 ரன்கள் குவித்து இந்த டெஸ்ட் போட்டியை டிரா செய்தது. மேலும் இந்த ஜோடி மிகச் சிறப்பாக விளையாடி 207 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியிருக்கிறது. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இடம் பெற்றுள்ள கேஎஸ்.பரத்துக்கு இந்த இன்னிங்ஸ் மிகுந்த நம்பிக்கை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு ஆறு விக்கெட்டை கைப்பற்றினால் வெற்றி என்று விளையாடிய இங்கிலாந்து லையன்ஸ் அணியால் ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்ற முடிந்தது. போட்டியும் டிராவில் முடிந்ததால் அந்த அணி ஏமாற்றத்துக்கு உள்ளாகி இருக்கிறது.