ரோகித், விராட், புஜாரா, ரகானே  இடத்தில் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற வாய்ப்புள்ள 4 வீரர்கள்!

0
4111
Ict

இந்திய கிரிக்கெட் தற்பொழுது 3 வடிவங்களிலும் புதிய வீரர்களை உள்வாங்கி, புதிய ஒரு அணியை உருவாக்கிக் கொண்டு பயணிக்க வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறது!

இந்திய டி20 அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்க, ஒருநாள் கிரிக்கெட் அணி அந்த வடிவத்திற்கான உலகக்கோப்பை முடிந்ததும் மாற்றி அமைக்கப்படுவதற்கான அதிக வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் புதிய வீரர்கள் வருவதற்கான சூழ்நிலையை மூத்த வீரர்கள் தங்களது பேட்டிங்கால் உருவாக்கி இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் மூத்த வீரர்களுக்கான வயதும் ஒரு காரணமாக இருக்கிறது.

இந்த அடிப்படையில் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் விளையாடும் புஜாரா, ரகானே ஆகியோருக்கு மாற்றாக, எந்த இளம் வீரர்கள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று இந்தக் கட்டுரைத் தொகுப்பில் பார்ப்போம்.

ஜெய்ஸ்வால் :

- Advertisement -

இடது கை இளம் வீரரான இவர் இந்திய கிரிக்கெட்டுக்காக மூன்று வடிவத்திலும் விளையாடக்கூடிய திறமையில் இருக்கிறார். அடுத்து நடக்கவுள்ள வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் புஜாரா இடத்தில் இவர் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் இவர் இயல்பான துவக்க ஆட்டக்காரர் என்பதால், ரோகித் சர்மா நகரும் பொழுது அவரது இடத்தில் இவர் விளையாடுவார் என்று நம்பலாம்.

ரிங்கு சிங் :

இவரும் இடது கை இளம் இந்திய வீரராக இருக்கிறார் மேலும் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக விளையாடுவதற்கான திறமையோடு இருக்கிறார். இவரது உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் புள்ளி விபரங்கள் மிகச் சிறப்பாக இருக்கிறது. தற்போதைய இந்திய கிரிக்கெட்டில் பேட்டிங் யூனிட்டில் மிடில் வரிசைதான் மிகவும் பிரச்சினையாக இருக்கிறது. இவர் மிடில் வரிசையிலேயே இன்னும் கீழே வந்து மிகச் சிறப்பாக விளையாடக்கூடியவர் என்பது இவருக்கான வாய்ப்பை பலப்படுத்துகிறது. இவரை விராட் கோலி, புஜாரா, ரகானே என்று எந்த மூத்த வீரருக்குப் பதிலாகவும் பயன்படுத்த முடியும்.

சுப்மன் கில் :

இவர் ஏற்கனவே இந்திய அணிக்காக மூன்று வடிவத்தில் விளையாடி வந்தாலும், உலகக் கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் ஒரு அணியில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்காவது இடத்தில் விளையாடுவதுதான் வழக்கமாக இருந்திருக்கிறது. இந்த வகையில் எடுத்துக் கொண்டால் அடுத்த விராட் கோலியாக, இந்திய அணியின் எதிர்கால பேட்டிங் தூணாகப் பார்க்கப்படுகிற கில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் இடத்தில் விளையாடவே வாய்ப்புகள் அதிகம்.

சர்பராஸ் கான் :

இந்த மூவருக்கும் பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதைத் தாண்டி, கடந்த இரண்டு வருடமாக இந்திய உள்நாட்டு டெஸ்ட் தொடரான ரஞ்சி தொடரில் ஆயிரக்கணக்கான ரன்களை குவித்து சப்ராஸ் கான் காத்திருக்கிறார். இவரும் மிடில் வரிசை பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த நான்கு வீரர்களும் இந்திய டெஸ்ட் அணிக்கான பேட்டிங் யூனிட்டில் தங்களுக்கான இடத்தை பிடிப்பதில் கடுமையான போட்டியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.