வெஸ்ட் இண்டீஸ் உடன் தோற்றாலும் இந்திய அணிக்கு கிடைத்திருக்கும் 4 முக்கிய விஷயங்கள்!

0
397
Indvswi2023

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் நீண்ட வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் நேற்றுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனால் விரும்பத்தகாத வகையில் டி20 தொடரை இழந்து முடிவுக்கு வந்திருக்கிறது. இதையடுத்து பும்ரா தலைமையிலான இந்திய அணி, இந்த மாதம் 18ஆம் தேதி அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க அயர்லாந்து பறந்து இருக்கிறது!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி தொடரை இரண்டுக்கு மூன்று என இழந்திருக்கிறது. மிக முக்கியமான தொடர்கள் அருகில் இருக்கும் நேரத்தில் தோல்வி என்பது தன்னம்பிக்கையை குறைக்கும் ஒரு நிகழ்வாகவே அமையும்.

- Advertisement -

ஆனாலும் இந்த தோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் இந்திய அணிக்கு நான்கு முக்கியமான விஷயங்கள் தெளிவாக கிடைத்திருக்கிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் இந்திய அணி குழப்பம் இல்லாமல் டி20 அணியை அமைத்துக் கொண்டு விளையாட முடியும். அது என்னவென்று இந்தச் சிறிய கட்டுரைத் தொகுப்பில் பார்க்கலாம்.

1 திலக் வர்மா

யுவராஜ் சிங் ஓய்வுக்குப் பிறகு நான்காவது இடத்தில் இந்திய வெள்ளை பந்து கிரிக்கெட்டுக்கு ஒரு பேட்ஸ்மேன் கிடைக்கவே இல்லை. தற்பொழுது இந்த தொடரில் ஒரு அரை சதம் உள்பட 173 ரன்கள் குவித்திருக்கும் இடதுகை பேட்ஸ்மேன் திலக் வர்மா இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கு நான்காவது வீரராக நம்பிக்கையாக தெரிகிறார்.

- Advertisement -

2 ஜெய்ஸ்வால்

ரைட் லெப்ட் காம்பினேஷன் கிரிக்கெட்டில் பேட்டிங்கில் மிகவும் முக்கியமானது. இப்படி அமையும் பொழுது பந்துவீச்சாளர்கள் எளிதில் செட்டில் ஆக முடியாது. எனவே ஸ்டிரைக் ரொட்டேட் செய்வதின் மூலம், பந்துவீச்சாளர்களின் லைன் அண்ட் லென்த்தை உடைக்க முடியும். இதன் மூலம் பந்துவீச்சாளர்களை தவறு செய்ய வைத்து ரன்கள் எடுத்துக் கொள்ள முடியும். துவக்க ஆட்டக்காரராக இடதுகை ஜெய்ஸ்வால் கிடைத்திருப்பது, இந்திய கிரிக்கெட்டுக்கு நீண்ட கால பயனளிக்கும் விஷயமாக இருக்கிறது. மேலும் அவர் சிறப்பான பேட்டிங் தொழில்நுட்பத்தையும் தைரியமான அணுகுமுறையையும் கொண்டிருக்கிறார்.

3 முகேஷ் குமார்

உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகக் கடுமையாக உழைத்து, இந்திய அணிக்கு தேர்வாகி, தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார், இந்த வலது கை வேகப்பந்துவீச்சாளர். யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு கடைசிக்கட்ட ஓவர்களில் தொடர்ச்சியாக யார்கர் பந்துகளை வீசக்கூடிய திறமை கொண்டவராகவும், புதிய பந்தில் கடினமான லென்த்தில் அடிக்கக்கூடியவராகவும், அதே சமயத்தில் பந்தை ஸ்விங் செய்யக்கூடியவராகவும் இருக்கிறார். இந்திய கிரிக்கெட்டில் வேகப்பந்துவீச்சுத் துறையின் வலிமையை நிச்சயம் இவர் அதிகரிப்பார்.

4 பேட்டிங் டெப்த் பிரச்சனை

இந்திய அணிக்கு இந்த டி20 தொடரில் மிக பிரச்சனையாக இருந்தது நம்பர் ஏழுடன் முடியும் பேட்டிங் வரிசைதான். எட்டாவது இடத்தில் ஒரு பேட்டிங் ஆப்ஷன் இல்லாத காரணத்தினால் முதல் டி20 போட்டியை தோற்றது. இதே காரணத்தால் ஐந்தாவது டி20 போட்டியில் கடைசி நேரத்தில் ரன்கள் எடுக்க சிரமப்பட்டது. இதனால் இந்திய அணிக்கு இந்த தொடரே கைநழுவி போயிருக்கிறது. எனவே குறைந்தது எட்டாவது இடம் வரைக்கும் பேட்டிங் வரிசையின் ஆழம் இருக்க வேண்டும் என்கின்ற தெளிவு, இந்த தொடரின் மூலம் இந்திய அணிக்கு கிடைத்திருக்கிறது. எனவே அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடக்க இருக்கும் டி20 உலக கோப்பைக்கு கவனமாக இந்திய அணி வரும் என்று எதிர்பார்க்கலாம்!