3வது டி20.. சூரியகுமார் யாதவ் ருத்ர தாண்டவம்.. வெஸ்ட் இண்டீஸை வச்சு செய்தது இந்தியா!

0
5364
Suryakumar

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று மிக வலிமையான முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தத் தொடரின் மூன்றாவது போட்டி இன்று கயானா மைதானத்தில் துவங்கியது. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் இசான் கிஷானுக்கு பதிலாக ஜெய்ஸ்வால் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமானார்!

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கையில் மேயர்ஸ் 25(20), பிரண்டன் கிங் 42(42), சார்லஸ் 14(12), நிக்கோலஸ் பூரன் 20(12), சிம்ரன் ஹெட்மையர் 9(8), ரோமன் பவல் 40(19), ரோமாரியோ ஷெப்பர்ட் 2 ரன்கள் எடுக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் வந்தது. இந்திய அணி தரப்பில் நான்கு ஓவர்களுக்கு 28 ரன்கள் தந்து மூன்று விக்கெட்டுகளை குல்தீப் யாதவ் வீழ்த்தினார்.

இந்தத் தொடரில் இந்தப் போட்டியை வென்றால் மட்டுமே நீடிக்க முடியும் என்ற நிலையில் இந்திய அணி களம் இறங்கியது. அதிரடியாக தைரியமாக விளையாட வேண்டும் என்ற நோக்கத்தில் அறிமுக வீரர் ஜெய்ஸ்வால் இரண்டு பந்துகளில் ஒரு ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். கில்லின் தடுமாற்றம் இந்த போட்டியிலும் தொடர்ந்தது. அவர் 11 பந்துகளுக்கு ஆறு ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் வழக்கமான ஜோடியான சூரியகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா இருவரும் ஜோடி சேர்ந்தார்கள். பழைய சூரியகுமார் யாதவ் வெளியே வந்தார். அவர் தான் சந்தித்த முதல் இரண்டு பந்துகளிலும் பவுண்டரி சிக்ஸர் விளாசி ஆரம்பித்தார். இவருக்கு திலக் வர்மா சற்றும் சளைக்காமல் தான் சந்தித்த முதல் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு அடித்து அமர்க்களமாக ஆரம்பித்து, நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்.

தொடர்ந்து மிகச்சிறப்பாக விளையாடிய சூரியகுமார் யாதவ் இந்த சுற்றுப்பயணத்தில் வெள்ளைப் பந்து தொடர்களில் முதல் அரை சதத்தை 25 பந்துகளில் எட்டினார். மேற்கொண்டு மிகச் சிறப்பாக விளையாடிய அவர் 44 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் 83 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 87 ரன்கள் குவித்து அசத்தியது.

இதற்கு அடுத்து திலக் வர்மா உடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்பாகவும் அதிரடியாகவும் விளையாடி 17 புள்ளி ஐந்து ஓவரில் இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அணியை வெல்ல வைத்தது. திலக் வர்மா 49(37), ஹர்திக் பாண்டியா 20(15) ரன்கள் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து மூன்று டி20 போட்டிகளில் தோற்றதில்லை என்கின்ற கௌரவத்தை இந்திய அணி காப்பாற்றி இருக்கிறது. மேலும் இந்த வெற்றியின் மூலம் தொடரில் இந்திய அணி நீடிக்கிறது. நான்காவது மற்றும் ஐந்தாவது டி20 போட்டி அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் நடக்கிறது.

- Advertisement -