பவுலிங்கில் தெறிக்கவிட்ட இளம் பட்டாளம், தொடரை கைப்பற்றியது இந்தியா!

0
227

91 ரன்கள் வித்தியாசத்தில் 3வது டி20 போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது இந்திய அணி.

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் அடித்தது.

- Advertisement -

நட்சத்திர வீரர் சூரியகுமார் யாதவ் தனது அதிரடியின் மூலம் 51 பந்துகளில் 112 ரன்கள் விளாசினார். இதில் ஒன்பது சிக்ஸர்கள் மற்றும் ஏழு பவுண்டரிகள் அடங்கும். ராகுல் திரிப்பாதி 16 பந்துகளில் 35 ரன்கள் அடித்து அவுட் ஆகினார். கடைசியில் வந்த அக்சர் பட்டேல் ஒன்பது பந்துகளில் 21 ரன்கள் அடித்தார்.

229 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு துவக்க ஜோடி குஷால் மெண்டிஸ்(23) மற்றும் நிஷங்கா(15) இருவரும் முதல் விக்கெட்டிற்கு 44 ரன்கள் சேர்த்தனர்.

மிடில் ஆர்டரில் தனஞ்செய டி செல்வா 14 பந்துகளில் 22 ரன்கள் அடித்து அவுட் ஆகினார். யாரேனும் ஒருவர் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோர் இலக்கை எட்டுவதற்கு உதவுவார்கள் என எதிர்பார்த்தபோது எவரும் நிலைத்து நின்று ஆடவில்லை.

- Advertisement -

இரண்டாவது டி20 போட்டியில் தரமான ஃபினிஷிங் செய்த கேப்டன் ஷனக்கா இப்போட்டியில் அதிரடியாக விளையாட முயற்சித்தார். ஆனால் இம்முறை இந்திய பவுலர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. 17 பந்துகளில் 23 ரன்கள் அடித்து பரிதாபமாக வெளியேறினார்.

மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழக்க இறுதியில் 16.4 ஓவர்கள் மட்டுமே பிடித்து 137 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இலங்கை அணி.

இதன் மூலம் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றியது. அதிகபட்சமாக அர்ஷதிப் சிங் மூன்று விக்கெட்டுகளையும், சகல், உம்ரான் மாலிக் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.