3வது ஓடிஐ.. ரன் குவிப்பில் இந்திய அணி இரண்டு  சாதனை.. இஷான் கில் சஞ்சு ஹர்திக் அதிரடி!

0
898
Indvswi2023

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முடித்துக் கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.

இந்த தொடரில் முதலில் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் ஒரு போட்டியை வெல்ல, தொடரை நிர்ணயிக்கும் தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்த போட்டிக்கான டாசை வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் இந்த ஆட்டத்திலும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடவில்லை. மேலும் அக்சர் படேல் மற்றும் உம்ரான் மாலிக் இருவரையும் நீக்கி ருதுராஜ் மற்றும் உனட்கட் இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

துவக்க வீரர்களாக களம் இறங்கிய கில் மற்றும் இசான் கிஷான் இருவரும் இந்த ஆட்டத்திலும் மிகச் சிறப்பான துவக்கத்தை தந்தார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 143 ரன்கள் சேர்த்தது. இஷான் கிஷான் அதிரடியாக விளையாடி 64 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 77 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்தத் தொடரில் இவருக்கு இது தொடர்ச்சியான மூன்றாவது அரைசதமாகும். இதற்கு அடுத்து அந்த ருதுராஜ் 8 ரன்களில் வெளியேறினார்.

- Advertisement -

நான்காவது இடத்தில் இந்த முறை வந்த சஞ்சு சாம்சன், அவர் மீது வைக்கப்பட்ட ஒட்டுமொத்த விமர்சனத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அதிரடியில் மிரட்டினார். 41 பந்துகளை சந்தித்த அவர் இரண்டு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் 41 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து சிறப்பாக விளையாடி வந்த கில் 92 பந்துகளில் 11 பவுண்டரிகள் உடன் 82 ரன் எடுத்து வெளியேறினார்.

இதற்கடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் சேர்ந்து அரைசத பார்ட்னர்ஷிப் கொண்டு வந்தார்கள். சூரியகுமார் யாதவ் இந்த முறை இரண்டு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 35 ரன்கள் எடுத்தார்.

இறுதிவரை களத்தில் நின்ற கேப்டன் ஹர்திக் பாண்டியா மிகச் சிறப்பாக விளையாடி 50 ஓவர்களில் அணி 351 ரன்கள் எட்ட உதவி செய்தார். அவர் மொத்தம் 52 பந்துகள் விளையாடி நான்கு பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உடன் 70 ரன்கள் எடுத்தார். அவருடன் களத்தில் நின்ற ரவீந்திர ஜடேஜா எட்டு ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் 73 ரன்கள் தந்து ரொமாரியோ செப்பர்டு இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த ஆட்டத்தில் கில், இஷான் கிஷான், சஞ்சு சாம்சங் மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா நான்கு பேர் அரைசதங்கள் அடித்தார்கள். இந்த வகையில் ஒருவர் கூட சதம் அடிக்காமல் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாக இந்தப் போட்டியில் அடிக்கப்பட்ட 351 ரன்கள் பதிவாகி இருக்கிறது.

இந்த வரிசையில் சதம் இல்லாமல் அடிக்கப்பட்ட அதிகபட்ச இந்திய அணியின் மொத்த ரன்கள் :
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் 351 ரன்கள்
இந்தியா – இலங்கை 350 ரன்கள்
இந்தியா – பாகிஸ்தான் 349 ரன்கள்
இந்தியா – பங்களாதேஷ் 348 ரன்கள்

மேலும் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அடித்த அதிகபட்ச ரன்னாக, இந்த ரன் பதிவாகி இருக்கிறது. இதற்கு முன்னால் 2009 ஆம் ஆண்டு கென்னிங்டன் மைதானத்தில் 339 ரன்கள் அடித்தது முதல் இடத்தில் இருந்தது.

- Advertisement -