36.2 ஓவர்கள்.. 82 பந்துகள் மீதி.. 2 சதங்கள்.. 4 வருடம் காத்திருந்து இங்கிலாந்தை பழி வாங்கியது நியூசிலாந்து.. உலக கோப்பை ஆரம்பமே அமர்க்களம்!

0
1387
England

பதிமூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி எதிர்பாராத ஆனால் மிகவும் சிறப்பான முடிவைக் கொண்ட போட்டியாக அமைந்திருக்கிறது.

குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்ட போட்டிக்கான டாஸில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.

- Advertisement -

இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் டேவிட் மலான் 14 மற்றும் ஜானி பேர்ஸ்டோ 33 ரண்களில் வெளியேறினார்கள். இதற்கு அடுத்து வந்த இளம் வீரர் ஹாரி புரூக் அதிரடியாக 16 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மொயின் அலி 11 ரன்களில் வெளியேறினார்.

இதற்கு அடுத்து ஜோ ரூட் உடன் கேப்டன் ஜோஸ்பட்ல ஜோடி சேர்ந்து பொறுப்பாகவும் அதேவேளையில் அதிரடியாகவும் விளையாடினார்கள். சிறப்பாக விளையாடிய பட்லர் 42 பந்தில் 43 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இங்கிருந்து இங்கிலாந்துக்கு சரிவு உண்டானது.

லியாம் லிவிங்ஸ்டன் 20, ஜோ ரூட் 77, சாம் கரன் 14, கிரீஸ் வோக்ஸ் 11, அதில் ரசித் 15* மார்க் வுட் 13* ரன்கள் எடுக்க 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு இங்கிலாந்து 282 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி பத்து ஓவர்கள் 48 ரன்கள் தந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார். சான்ட்னர் மற்றும் பிலிப்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய நியூசிலாந்து அணி துவக்க ஆட்டக்காரர் வில் எங் விக்கெட்டை அவர் ரன் கணக்கை துவங்காத பொழுதே இழந்தது. ஆனால் இதற்குப் பிறகு நியூசிலாந்து செய்தது ஒரு மேஜிக்!

டெவோன் கான்வே உடன் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரநாத் ஜோடி சேர்ந்து இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சிதைத்து விட்டார்கள். இவர்கள் இருவரும் உலகச் சாம்பியனுக்கு எதிராக விளையாடியது போல் தெரியவில்லை. ஒரு சிறிய அசோசியேட் நாட்டிற்கு எதிராக விளையாடியது போல் அனாயசமாக விளையாடினார்கள்.

மிகச் சிறப்பாக விளையாடிய இருவரும் சதம் அடித்தார்கள். தொடர்ந்து விளையாடிய கான்வே 150 ரன்களை தாண்டினார். இந்த ஜோடி இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 273 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, 36.2 ஓவர்களில் இலக்கை எட்டி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்தது.

டெவான் கான்வே 121 பந்துகளில் 19 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 152 ரன்கள் குவித்தார். ரச்சின் ரவீந்தரா 96 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்களுடன் 123 ரன்கள் விளாசினார். இங்கிலாந்து தரப்பில் சாம் கரன் மட்டும் ஆறு ஓவர்களுக்கு 47 ரன்கள் தந்து 1 விக்கெட் கைப்பற்றினார்.

கடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தோற்றதற்கு நான்கு வருடங்கள் கழித்து சரியாக பழிவாங்கி இருக்கிறது நியூசிலாந்து. இந்த அதிரடியான வெற்றி உலகக் கோப்பை குறித்தான பார்வையை தற்பொழுது மாற்றி இருக்கிறது என்று கூற வேண்டும்.