நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் முதல் சுற்றுடன் தோல்வியடைந்து அதிர்ச்சி அளித்து வெளியேறிய இங்கிலாந்து அணி, தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.
இந்த சுற்றுப்பயணத்தில் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடுகிறது. நேற்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நார்த் சவுண்ட் மைதானத்தில் தொடங்கியது.
இந்தப் போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்வது என முடிவு செய்தது. உலக கோப்பையில் விளையாடிய பல வீரர்கள் இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணியில் இருந்து கழட்டி விடப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த முறை இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் 45, வில் ஜாக்ஸ் 26 துவக்க வீரர்களாக வந்து ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். அடுத்து ஜாக் கிரவுலி 48, பென் டக்கெட் 20, ஹாரி ப்ரூக் 71, ஜோஸ் பட்லர் 3, லியாம் லிவிங்ஸ்டன் 17, சாம் கரன் 38, பிரைடன் கார்ஸ் 31* ரேகன் அகமத் 12, கட் அட்கிஸ்டன் 4 என ரன்கள் எடுக்க, 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 325 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரொமாரியோ ஷெப்பர்ட், மோட்டி, ஓசோன் தாமஸ் மூவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதற்கு அடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்த முறை துவக்க ஆட்டக்காரராக அனுப்பப்பட்ட இளம் வீரர் அலிக் ஆதனஸ் 66, பிரண்டன் கிங் 35, கேசி கார்தி 16, கேப்டன் ஷாய் ஹோப் 109*, சிம்ரன் ஹெட்மயர் 32, ரூதர்போர்ட் 6, ரொமரியோ செப்பர்டு 48, அல்ஜாரி ஜோசப் 2 ரன்கள் எடுக்க 48.5 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து தரப்பில் கட் அட்கிஸ்டன் மற்றும் ரேகன் அகமத் இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள். பொதுவாகவே இங்கிலாந்து என்றால் வெஸ்ட் இண்டீஸ் விட்டுக் கொடுக்காமல் எப்பொழுதும் விளையாடி வந்திருக்கிறது. அது இப்பொழுதும் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!