32 ஓவர் 128 ரன்.. இந்தியா வரலாற்று வெற்றி.. பாக் புள்ளி பட்டியலில் பின்தங்கியது.. ஆசிய கோப்பையில் அதிரடி திருப்பம்!

0
6487
Virat

நடப்பு 16வது ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அனைவரும் எதிர்பார்த்து இருந்த, இந்தியா பாகிஸ்தான் மோதிக்கொண்ட இரண்டாவது சுற்று போட்டிக்கு முடிவு கிடைத்திருக்கிறது.

இந்த போட்டிக்கான டாசில் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா 56(49), மற்றும் கில் 52(58) என 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கம் தந்தார்கள்.

- Advertisement -

இதையடுத்து இந்திய அணி நேற்று 24.1 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்த பொழுது மழை குறுக்கிட்டது. இந்த நிலையில் ஆட்டம் இன்று ரிசர்வ் டேவுக்கு வந்தது.

இந்திய அணியின் இன்னிங்ஸை விராட் கோலி மற்றும் கேஎல்.ராகுல் இருவரும் தொடர்ந்து சிறப்பாக கட்டமைத்து விளையாடினார்கள். அரைசதத்தை தாண்டிய இருவரும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்கள்.

விராட் கோலி மற்றும் கேஎல்.ராகுல் இருவரும் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 233 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது. விராட் கோலி 94 பந்துகளில் 9 பவுண்டரி 3 சிக்ஸர்கள் உடன் 122 ரன்கள், கே.எல்.ராகுல் 106 பந்துகளில் 12 பவுண்டரி 2 சிக்ஸர்கள் உடன் 111 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்கள். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹின் ஷா அப்ரிடி மற்றும் சதாப் தான் இருவரும் தலா ஒரு விக்கெட்வீழ்த்தினார்கள்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு பவர் பிளேவில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் முகமது சிராஜ் இருவரும் மிகப்பெரிய நெருக்கடியை கொடுத்தார்கள். பும்ரா இமாம் உல் ஹக்கை 9 ரன்களில் வெளியேற்றினார். இதற்கு அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாமை 10 ரன்களில் ஹர்திக் பாண்டியா கிளீன் போல்ட் ஆக்கினார்.

அடுத்து வந்து பாகிஸ்தான அணியின் நட்சத்திர வீரர் முகமது ரிஸ்வானை ஷர்துல் தாக்கூர் இரண்டு ரன்களுக்கு வீழ்த்தினார். இதற்கு அடுத்து பாகிஸ்தான் அணியின் பகார் ஜமான் 27, ஆகா சல்மான் 23, இப்திகார் அகமத் 23, சதாப் கான் 6, ஃபகிம் அஷ்ரப் 4 என ஐந்து விக்கெட்டுகளை, 8 ஓவர்கள் வீசி, 25 ரன்கள் தந்து குல்தீப் யாதவ் வீழ்த்தினார்.

இன்றைய நாளில் முதுகுப் பிடிப்பு காரணமாக பாகிஸ்தான் அணியின் ஹாரிஸ் ரவுப் பந்து வீச, பேட்டிங் செய்ய வரவில்லை. அதேபோல் விரலில் காயம்பட்ட காரணத்தினால் நசீம் ஷா பேட்டிங் செய்ய வரவில்லை. இதனால் 32 ஓவர்களுக்கு பாகிஸ்தான் அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்திருந்தபொழுது ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது சுற்று முதல் போட்டியில் அபார வெற்றி பெற்று இருக்கிறது.

இந்த ரன் வித்தியாசம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணியின் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ரன் வித்தியாசமாகும். மேலும் ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது அதிகபட்சம் ஆகும். இலங்கை அணி 234 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி முதலிடத்தில் இருக்கிறது!

நாளை இந்திய அணி இரண்டாவது சுற்றில் தனது இரண்டாவது போட்டியில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வென்றால் இந்திய அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விடும். இல்லையென்றால் பங்களாதேஷ் போட்டி இந்தியாவுக்கு மிக முக்கியமானதாக மாறும். தற்பொழுது இந்தியா புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்க, பாகிஸ்தான் முதல் இடத்தில் இருந்து சரிந்து மூன்றாவது இடத்திற்கு வந்திருக்கிறது. இலங்கை அணி இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது!