31 ஓவர்.. ஆப்கான் அசத்தல் வெற்றி.. பாகிஸ்தானை புள்ளி பட்டியலில் கீழே இறக்கியது.. அரைஇறுதி வாய்ப்பு எப்படி?.. நெதர்லாந்து பரிதாபம்!

0
2626
Afghanistan

இன்று உத்தரப்பிரதேசம் லக்னோ மைதானத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிக்கொண்ட போட்டி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் நடைபெற்றது.

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வது என தீர்மானித்தது. அந்த அணி மூன்று ரன்னில் முதல் விக்கெட்டை இழந்த போதிலும் கூட, பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் அடுத்து 70 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை பன்னெண்டாவது ஓவரில் கொண்டு வந்தது.

- Advertisement -

சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த மேக்ஸ் ஓ டொனால்ட் 40 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து தேவையில்லாமல் ஓடி ரன் அவுட் ஆனார். இன்றைய போட்டியில் நெதர்லாந்து அணிக்கு ரன் அவுட்தான் மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. மேற்கொண்டு அந்த அணிக்கு மூன்று ரன் அவுட்டுகள் வந்தன. மொத்தமாக ஒரு இன்னிங்ஸில் நான்கு ரன் அவுட்டுகள் இன்று செய்யப்பட்டது.

நெதர்லாந்து அணிக்கு காலின் அக்கர்மேன் 29, சைப்ரான் ஏங்கல்பிரிச் 58 ரன்கள் எடுக்க, இந்த முறை மற்ற யாரும் நெதர்லாந்து அணிக்கு பேட்டிங்கில் கைக்கொடுக்கவில்லை. இதன் காரணமாக 46.3 ஓவரில் நெதர்லாந்து அணி 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஆப்கானிஸ்தான் அணியின் தரப்பில் மூத்த வீரர் முகமது நபி 9.3 ஓவர்கள் பந்து வீசி, ஒரு மெய்டன் செய்து, 28 ரன்கள் தந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார். இளம் சுழற் பந்துவீச்சாளர் நூர் அகமது ஒன்பது ஓவர்களுக்கு 31 ரன்கள் தந்து, 2 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் குர்பாஸ் 10 மற்றும் இப்ராகிம் 20 ரன்களில் வெளியேறினார்கள்.

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த ரஹமத் ஷா மற்றும் கேப்டன் ஷாகிதி இருவரும் வழக்கம் போல் சிறப்பாக விளையாடி 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். ரஹ்மத் ஷா 52 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்கடுத்து மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் கேப்டன் ஷாகிதி 56, ஓமர்ஸாய் 31 ரன்கள் எடுக்க, 31.3 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு இது ஏழாவது ஆட்டத்தில் நான்காவது வெற்றியாகும். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி புள்ளி பட்டியலில் பாகிஸ்தானை கீழே இறக்கி, 8 புள்ளிகள் உடன் 5வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. மேலும் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இருக்கும் அரையிறுதி வாய்ப்பு ஆப்கானிஸ்தான் அணிக்கும் இருக்கிறது.

அதே சமயத்தில் ஆப்கானிஸ்தான அணி தனது கடைசி இரண்டு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளை எதிர்த்து விளையாட இருப்பதுதான், அந்த அணி உடைய அரைஇறுதி வாய்ப்பை சிக்கல் ஆக்குகிறது. சுழற் பந்துவீச்சில் ஏதாவது மாயம் செய்தால், ஆப்கானிஸ்தானை அரையிறுதியில் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது!