2022 ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் பைனலில் குஜராத் – ராஜஸ்தான் அணிகள் கோப்பைக்காக மோதுகின்றன. இரண்டு இளம் இந்திய கேப்டன்கள் மோதும் இப்போட்டியில் அனல் பறக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. வெளியேறிய மற்ற அணிகள் இந்த ஆண்டு செய்த தவறை திருத்திக் கொண்டு அடுத்த ஆண்டு முழு உத்வேகத்துடன் களமிறங்குவர். அணியை வழிநடத்த சிறந்த கேப்டன் அமைவது அவசியம். நிலையான அணி வைத்திருந்தும் சரியான கேப்டன் இல்லாமல், அழுத்தமான சமயத்தில் சொதப்பி போட்டியில் தோல்வியை தழுவிய அணிகளும் உண்டு.
சென்னை, மும்பை போன்ற அணிகளின் வெற்றிக்கு அணி கேப்டனின் பங்களிப்பும் தான் காரணம். சென்ற ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா, சென்னை, பஞ்சாப், பெங்களூர் ஆகிய அணிகள் புதிய கேப்டனை நாடிச் சென்றனர். அவர்களில் பெங்களூர் அணிக் கேப்டன் மட்டுமே தன்பனியை பிளே ஆப் சுற்று வரை அழைத்துச் சென்றார். சென்னை அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட ஜடேஜா இடையிலேயே விலகினார். அதனால் தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பேற்றார். இந்த ஆண்டைப் போல் அடுத்த ஆண்டும் புதிய கேப்டன்களை ஒரு சில அணிகள் அறிவிக்க வாய்ப்புள்ளது. அது குறித்து இக்கட்டுரையில் காண்போம்.
மும்பை இந்தியன்ஸ் :
2012 வரை ஒரு கோப்பை கூட வெல்லாத அணி 2013ஆம் ஆண்டு இளம் ரோஹித் ஷர்மாவை கேப்டனாக அறிவித்தது ஐந்து கோப்பைகளை அள்ளியது. இதோது சாம்பியன்ஸ் டிராபி ஒன்றையும் கைப்பற்றியுள்ளது. இத்தனை வெற்றிகளுக்கும் பொதுவாக இருப்பவர் கேப்டன் ரோஹித் ஷர்மா தான். அவர் செய்த பணிகள் அனைத்தும் போதும் என நினைத்து இந்த ஆண்டுடன் அவரை கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்க மும்பை இந்தியன்ஸ் அணி முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2022 ஐபிஎலில் பேட்ஸ்மேனாக ரோஹித் ஷர்மா மிகவும் தடுமாறினார். ஒரு அரை சதம் கூட அவர் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் அவர் தன் பொறுப்பில் இருந்து வெளியே வந்து சிறப்பாக பேட்டிங் செய்வதே நல்லது. அவருக்கு அடுத்து கேப்டனாக சூர்யகுமார் யாதவை அறிவிக்கலாம். ஏற்கனவே அவர் உள்ளூர் போட்டிகளில் அனைத்து ஃபார்மட்டிலும் மும்பை அணியை வழிநடத்திய அனுபவம் அவருக்கு உள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் :
2022 ஆண்டு ஏலத்திற்கு முன் நட்சத்திர பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன் கே.எல்.ராகுலை பஞ்சாப் அணி விடுவித்தது. ஆனால் உடனே மயாங்க் அகர்வாலை அடுத்த கேப்டனாக அறிவிக்கவில்லை. ஏலத்தில் புதிய கேப்டனுக்கான தேடலில் அந்த அணியும் ஈடுப்பட்டது. ஆனால் யாரும் கிடைக்காததால் மயாங்க் அகர்வாலையே வழி நடத்த அணுகினர். பஞ்சாப் அணியை மிகுந்த நிதானத்துடன் தலைமை தாங்கினார் மயாங்க் அகர்வால். இருப்பினும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற இயலவில்லை.
ஜடேஜாவைப் போல இவரும் தன் ஆட்டத்தில் சரியாக கவனம் செலுத்தவில்லை. அணியின் நன்மைக்காக தன் ஓப்பனிங் ஸ்பாட்டையும் தியாகம் செய்தார். அடுத்த ஆண்டு இவருக்கு பதிலாக அனுபவம் வாய்ந்த ஷிக்கர் தவானை புதியக் கேப்டனாக அறிவிக்கலாம். கடைசியாக தவான், சென்ற ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இந்தியா அணிக்கு கேப்டனாக செயல்பட்டார். அவரைப் பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாக அறிவிக்க வாய்ப்புள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் :
டேவிட் வார்னரை விடுவித்த பின்னர், ஹைதராபாத் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் யாரும் அமையவில்லை. கேப்டன் வில்லியம்சன் ஒப்பனராக களமிறங்கினார். ஆனால் அவர் 100 ஸ்டிரைக் ரேட்டுக்குக் கீழ் பேட்டிங் ஆடினார். அவருக்கு 14 கோடி வழங்கியது ஏன் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் அவரது தோலில் இருக்கும் பாரத்தை குறைத்து அவரை பேட்டிங் செய்ய வைக்கலாம்.
2018ஆம் ஆண்டைப் போல டாப் ஆர்டரில் தொடர்ந்து அணிக்கு ரன்கள் சேர்ப்பது மிகவும் அவசியம். அவருக்கு பதிலாக தென் ஆப்ரிக்கா வீரர் மார்க்ரம் அல்லது வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஆட்டக்காரர் மற்றும் நடப்புக் கேப்டன் பூரனை வருங்கால ஹைதராபாத் அணியை தலைமை தாங்க அழைக்கலாம்.