இந்த ஆண்டு புதிதாக அறிமுகமாகி டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பிடித்த மூன்று வீரர்கள்!

0
183
ICT

கடந்த ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு எமிரேட்டில் டி20 உலகக்கோப்பை போட்டி நடந்தது. இந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியோடும் 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்து அணியோடும் தோல்வியை தழுவி அதிர்ச்சிகரமாக முதல் சுற்றோடு வெளியே வந்தது.

இந்த உலகக் கோப்பை தொடருக்கு முன்பு நடந்த இரண்டு பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி வீரர்கள் விளையாடிய விதத்தை பார்த்து ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவன் ஸ்மித் இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்லும் அணிகளில் முக்கியமான அணி என்று கூறியிருந்தார். ஆனால் முடிவுகளோ யாரும் எதிர்பார்க்காத வகையில் அமைந்தது.

- Advertisement -

அதுவும் குறிப்பாக பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தழுவிய தோல்வி, இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தில் பல அதிர்ச்சி அலைகளை எழுப்பியதோடு, நெருக்கடியிலும் தள்ளியது. அந்த நெருக்கடி இந்திய அணிக்குள் பல மாற்றங்களை உருவாக்கியது.

மிகக் குறிப்பாக அந்த டி20 உலக கோப்பை தொடரில் தனக்கு கேப்டனாக கடைசி தொடர் என்று கேப்டன் விராட் கோலி அறிவித்திருந்தார். அதேபோல் அப்போது தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் அந்த தொடரோடு முடிவுக்கு வந்தது. இதையடுத்து ரோகித் சர்மா புதிய கேப்டன் ஆகவும், ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.

அடுத்து நடக்க உள்ள இரண்டு உலகக் கோப்பைகளில் ரோகித் சர்மா ராகுல் டிராவிட் கூட்டணி ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடிக்கு இயல்பாகவே சென்றது. இதனால் அணிக்குள் பல மாற்றங்கள் நடந்தன. இளம் வீரர்கள் மட்டுமல்லாது அணியில் இல்லாமல் இருந்த மூத்த வீரர்களும் அணிக்குள் வந்தனர். மேலும் பலவகையான பேட்டிங் கூட்டணி மற்றும் பந்துவீச்சு கூட்டணிகள் பரிசோதிக்கப்பட்டன. இந்த பரிசோதனை முயற்சி கடைசியாக நடந்த ஆசிய கோப்பையில் கூட தொடர்ந்தது. அந்த அளவிற்கு கடந்த வருடம் டி20 உலக கோப்பையில் ஏற்பட்ட தோல்வி இந்திய கிரிக்கெட்டில் நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது. இதனால் கடந்த டி20 உலகக் கோப்பையின் போது இந்திய அணியின் தொப்பியை அணியாத இளம் வீரர்கள், மூன்று பேர் தற்போது டி20 உலகக்கோப்பை இந்திய அணிக்குள் வந்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றித்தான் இந்தக் கட்டுரையில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

ஹர்சல் படேல்:

குஜராத்தைச் சேர்ந்த 31 வயதான இந்த மித வேகப்பந்து வீச்சாளர், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக 15 ஆட்டங்களில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஒரு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையைப் படைத்தார். இந்த ஆண்டும் 15 ஆட்டங்களில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இவர் டி20 போட்டிகளில் மிடில் மற்றும் டெத் ஓவர்களில் பந்து வீசுவதில் தனித் திறமை உள்ளவராக இருக்கிறார். இவர் திடீரென்று வீசக்கூடிய மெதுவான பந்துகளை பேட்ஸ்மேன்களால் கணிக்க முடியவில்லை. இது இவரது பலமாக இருக்கிறது. இந்தக் காரணத்தால் டி20 போட்டியில் மிடில் மற்றும் டெத் ஓவர்களில் இந்திய அணிக்கு உள்ள பிரச்சனையை தீர்க்க உலகக் கோப்பை முடிந்து நவம்பர் மாதம் இந்தியாவில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் இவர் இந்திய அணிக்கு அறிமுகமானார்.

தீபக் ஹூடா:

27 வயதான இந்த பரோடா வீரர் மொத்தம் நான்கு ஐபிஎல் அணிகளுக்கு விளையாடியிருக்கிறார். தற்போது ஐபிஎல் தொடருக்கு புதிய அணியான லக்னோ அணிக்கு விளையாடி வருகிறார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இவர் 15 ஆட்டங்களில் நான்கு அரைசதங்களுடன் 451 ரன்களை அடித்தார். இவர் ஆப் ஸ்பின் வீசும் ஒரு பகுதி நேர பந்து வீச்சாளரும் கூட. ஏறக்குறைய உலகின் எல்லா டி20 அணிகளிலும் ஆப் ஸ்பின் பந்து வீச்சுக்கு என்று ஒரு சிறப்பு பந்து வீச்சாளரை வைத்துக்கொள்வது இல்லை. மாறாக ஒரு பகுதி நேர பந்து வீச்சாளரைத்தான் வைத்துக் கொள்கிறார்கள். இப்படி ஒரு பந்துவீச்சாளர் இந்திய டி20 அணியில் இல்லாதது பின்னடைவாக இருந்தது. இதனை சரி செய்யும் விதமாக பிப்ரவரி மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியிலும், அதே பிப்ரவரி மாதம் இலங்கை அணிக்கு எதிராக டி20 போட்டியிலும் அறிமுகமானார். இதையடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட அயர்லாந்து சென்ற இந்திய அணியில் இடம் பிடித்த இவர், அந்தத் தொடரில் ஒரு மிகச்சிறப்பான சதத்தை அதிரடியாக விளாசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அர்ஸ்தீப் சிங் :

23 வயதான இந்த பஞ்சாப் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். புதிய பந்தில் பந்தை இருபுறத்திலும் காற்றில் திருப்பக்கூடிய திறமையும் இருக்கிறது. அதே சமயத்தில் இறுதி கட்ட ஓவர்களில் பிளாக் ஹோல் மற்றும் யார்க்கர் பந்துகளை துல்லியமாக வீசி ரன்களை விட்டுத் தராமல் இருக்கவும் முடிகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் பெரிதும் கவனம் எடுத்து வந்த இவரை, இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்குப் பிறகு இந்தியாவில் சவுத் ஆப்பிரிக்கா அணியுடன் நடந்த டி20 தொடரில் தேர்வு செய்து ஆட வாய்ப்பு அளிக்கவில்லை. இதை அடுத்து இங்கிலாந்து சென்று டி20 விளையாடிய இந்திய அணியில் ஜூலை மாதம் அறிமுகமானார். இதற்குப் பிறகு அதற்கு அடுத்து வந்த எல்லா டி20 தொடர்களிலும் இடம் பெற்ற இவர் தற்போது டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பிடித்திருக்கிறார்.