ஆஸ்திரேலியாவின் முக்கியமான 3 பலவீனங்கள்.. இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு சாதகமாக மாறும் விஷயம்!

0
3004
Australia

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான குஜராத் அகமதாபாத் மைதானத்தில், நவம்பர் 19ஆம் தேதி, 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில், இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன!

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலியா அணி எட்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்திருக்கிறது. இதற்கு முன்பு தகுதி பெற்ற ஏழு முறையில் ஐந்து முறை ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றி இருக்கிறது.

- Advertisement -

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளிடம் படுதோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்துக்கு அப்பொழுது ஆஸ்திரேலியா தள்ளப்பட்டது. அந்த நேரத்தில் ஆஸ்திரேலியா அணி குறித்து விமர்சனங்கள் நிறைய இருந்தன.

இந்த நிலையில் இருந்து ஆஸ்திரேலியா அணி மீண்டும் எழுந்து வந்து தொடர்ச்சியாக 8 போட்டிகளில் வெற்றி பெற்று 8வது முறையாக ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் ஆஸ்திரேலியா அணிக்கு சில பலவீனங்கள் இருக்கவே செய்கின்றன. அப்படி ஆஸ்திரேலியா அணிக்கு இருக்கும் மூன்று முக்கிய பலவீனங்கள் பற்றி பார்ப்போம்!

மிடில் ஆர்டர் :

- Advertisement -

ஆஸ்திரேலியா அணியின் மிடில் ஆர்டரில் உலகத் தரமான ஸ்மித் மற்றும் லபுசேன் இருவரும் இருக்கிறார்கள். ஆனால் இவர்களிடம் இருந்து இவர்களின் தரத்திற்கான ரன்கள் இந்த முறை வரவே இல்லை. இருவருக்குமே ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் பலவீனம் இருக்கிறது. மேலும் ஆஸ்திரேலியா அணியின் அதிக ரன்கள் குவித்தவர்களாக டேவிட் வார்னர் மற்றும் மிச்சல் மார்ஸ் இருவர் மட்டுமே இருக்கிறார்கள். மேலும் மிடில் ஆர்டர்கள் வேகமாக ரன்கள் கொண்டுவரக்கூடியவர்களாக இல்லை. மேக்ஸ்வெல் கைவிட்டால் ஆஸ்திரேலியா மிடில் ஆர்டரில் மொத்தமாக விழுந்து விடும்.

வேகப்பந்து வீச்சு :

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பவர் பிளேவில் புதிய பந்தில் விக்கெட் எடுப்பது மிகவும் அவசியமான ஒன்று. இந்த இடத்தில் மிகவும் நம்பிக்கைக்குரிய மிட்சல் ஸ்டார்க் நேற்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிக்கு முன்பு வரை ஏமாற்றம் அளித்தே வந்தார். 10 ஓவர்களை எளிமையாக எதிரணி விளையாடிவிட்டால், ஆஸ்திரேலியாவை அதற்கு மேல் பந்துவீச்சில் காப்பாற்ற ஆடம் ஜாம்பா மட்டுமே இருப்பது பின்னடைவு.

சுழல் பந்துவீச்சு :

மிடில் ஓவர்களில் விக்கெட்டை கைப்பற்றுவது வெற்றிக்கு மிக அவசியம். இந்த இடத்தில் பேட்ஸ்மேன்களை இலகுவாக விளையாட விட்டால், பிறகு விக்கெட்டை கைவசம் வைத்து கடைசி 15 ஓவர்களில் பெரிய சேதாரத்தை உண்டு செய்து விடுவார்கள். ஆனால் ஆஸ்திரேலியா அணிக்கு மிடில் ஓவர்களில் ஆடம் ஜாம்பா தவிர்த்து இருப்பது மேக்ஸ்வெல் மற்றும் டிராவிஸ் ஹெட் மட்டுமே. இடதுகை சுழற் பந்துவீச்சாளர் இல்லாதது பெரிய பின்னடைவாக இருக்கிறது.

இந்த பலவீனங்களை இந்திய அணி பயன்படுத்திக் கொண்டால், ஆஸ்திரேலியா அணியை மீண்டும் ஒரு முறை எளிமையாக வீழ்த்துவது மட்டுமில்லாமல், மூன்றாவது முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை கைப்பற்றும் என்பதில் சந்தேகம் இல்லை,