ஆஸிக்கு 2வது அடி.. இந்தியா அபார வெற்றி.. டாஸ் தோற்றும் வெற்றிக்கு எது காரணம்?

0
9439
ICT

ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடர் முடிந்து மூன்று நாட்களில், இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்கியது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இன்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்ட இரண்டாவது போட்டி திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

- Advertisement -

இந்திய பேட்டிங் யூனிட்டில் முதல் மூன்று இடங்களில் வந்த ஜெய்ஸ்வால் 53(25), ருத்ராஜ் 58(43), இஷான் கிஷான் 52(32) என அதிரடியாக மூவரும் அரை சதம் அடித்தார்கள். இதற்கு அடுத்து வந்த கேப்டன் சூரியகுமார் யாதவ் 10 பந்தில் 19 ரன்கள் என வெளியேறினார்.

இறுதி கட்டத்தில் ஒன்பது பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர் என 31 ரன்கள் குவித்து ரிங்கு சிங் மிரட்டினார். திலக் வர்மா இரண்டு பந்தில் ஏழு ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் குதித்தது. ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் எல்லீஸ் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கடுத்து பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய ஆஸ்திரேலியா வேகமாக ஆரம்பித்தது. வேகப் பந்துவீச்சாளர்கள் அடி வாங்க, மூன்றாவது ஓவரில் வந்த சுழற் பந்துவீச்சாளர் ரவி பிஸ்னோய் மேத்யூ ஷார்ட் 19 மற்றும் ஜோஸ் இங்லீஷ் 2 இருவரையும் வெளியேற்றினார்.

- Advertisement -

அடுத்து மேக்ஸ்வெல்லை 12 ரன்களில் அச்சர் படேல், ஸ்மித்தை 19 ரன்களில் பிரசித் கிருஷ்ணா இருவரும் வெளியேற்றினார்கள். இதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த ஸ்டாய்னிஸ் மற்றும் டிம் டேவிட் இருவரும் இந்திய அணியின் பந்து வீசை அதிரடியாக நொறுக்கி தள்ளினார்கள்.

ஒரு கட்டத்தில் இந்த ஜோடி ஆஸ்திரேலியாவை வெற்றி நோக்கி வேகமாக பயணிக்க வைத்தது. மீண்டும் பந்து வீச்சுக்கு வந்த ரவி பிஸ்னோய் டிம் டேவிட்டை 37(27) ரன்களில் வெளியேற்ற, அடுத்து முகேஷ் குமார் ஸ்டாய்னிஸை 45(25) ரன்களில் அனுப்பி வைத்தார்.

இதற்கு அடுத்து இந்திய அணியின் வெற்றி எளிதாக அமைந்தது. சீன் அப்பாட் 1, நாதன் எல்லீஸ் 1, ஆடம் ஜாம்பா 1 என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதற்கு அடுத்து விக்கெட்டை கொடுக்காமல் கேப்டன் மேத்யூ வேட் நான்கு சிக்ஸர் உடன் 23 பந்தில் 42 ரன்கள் எடுத்தார். தன்வீர் சங்கா இரண்டு ரன்கள் உடன் களத்தில் இருந்தார்.

ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. இந்திய அணியின் தரப்பில் பிரசித் கிருஷ்ணா மற்றும் ரவி பிஸ்னோய் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.

இந்த போட்டி நடைபெற்ற ஆடுகளம் மெதுவாக இருந்தது மேலும் பந்தும் திரும்பியது. 160 ரன்கள்தான் முதலில் ஆடி எடுக்க முடியும் என்கின்ற நிலை இருந்தது. 10 ஓவர்கள் தாண்டிதான் இந்தியா பேட்டிங் செய்யும்பொழுது பனி வர வாய்ப்பு இருந்தது.

முதல் 10 ஓவர்கள் பேட்டிங் செய்ய கடினமான நேரத்தில், இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் தனக்கு வழங்கப்பட்ட பிளாஸ்டர் ரோலில் சரமாரியாக அடித்து நொறுக்கியதால் பவர் பிளேவில் கிடைத்த ரன்கள்தான் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இந்திய அணியின் டி20 கிரிக்கெட் அணுகுமுறை தற்பொழுது மிக அதிரடியாக மாறியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!