25ஓவர்.. 200ரன்.. 402 ரன்கள் டார்கெட்டை வென்ற பாகிஸ்தான்.. அரையிறுதி கதவுகள் திறந்தது.. ஆப்கான் வரை வாய்ப்பு.. புள்ளி பட்டியலில் அதிரடி மாற்றம்!

0
1084
Pakistan

இன்று பாகிஸ்தான் அணி நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் வாழ்வா சாவா போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக பெங்களூரு மைதானத்தில் விளையாடியது.

இந்தப் போட்டி துவங்குவதற்கு முன்பிருந்தே மழையின் ஆபத்து இருந்திருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி முதலில் டாஸ் வென்று பந்து வீசுவது என முடிவு செய்தது.

- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு ரச்சின் ரவீந்தரா அதிரடியாக 108 ரன்கள் மற்றும் இன்று போட்டிக்கு திரும்பிய கேப்டன் கேன் வில்லியம்சன் 95 ரன்கள், கிளன் பிலிப்ஸ் 41 ரன்கள், மார்க் சாப்மேன் 39 ரன்கள், கான்வே 35 ரன்கள் எடுக்க, 50 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு நியூசிலாந்து அணி 401 ரன்கள் குவித்தது.

பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டிய கட்டாயத்திலும் அதே சமயத்தில் மழையின் குறுக்கீட்டுக்கு தகுந்தவாறு விளையாட வேண்டிய நெருக்கடியிலும் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. இந்த நிலையில் அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபிக் நான்கு ரன்களில் வெளியேறினார்.

மேற்கொண்டு ஜோடி சேர்ந்த பகார் ஜமான் மற்றும் பாபர் அசாம் ஜோடி மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. ஒரு முனையில் கேப்டன் பாபர் அசாம் பொறுப்பான முறையில் ஒத்துழைப்பு தர, மறுமுனையில் பகார் சாமான் அதிரடியில் மிரட்டினார்.

- Advertisement -

சிறப்பாக விளையாடிய அவர் 63 பந்துகளில் சதம் அடித்தார். இதற்கிடையே 21.3 ஓவர்களில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்திருந்த பொழுது மழை குறுக்கிட்டது.

மீண்டும் மழை நின்ற பொழுது 41 ஓவர்களுக்கு 342 ரன்கள் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் களம் இறங்கிய இந்த ஜோடி அதிரடியில் ஈடுபட்டது. ஆனால் மழை மீண்டும் 25.3 ஓவரில் வந்தது. அதனால் மீண்டும் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

அந்த நேரத்தில் பாகிஸ்தான் அணி சரியாக ஒரு விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்திருந்தது. பகார் ஜமான் 126, பாபர் அசாம் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்கள். மேற்கொண்டு மழை நிற்காமல் பெய்ய, பாகிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக டக்வொர்த் லீவிஸ் விதிப்படி அறிவிக்கப்பட்டது.

பாகிஸ்தான் அதிரடியாகப் பெற்ற இந்த வெற்றியின் மூலமாக எட்டு போட்டிகளில் நான்கு வெற்றி பெற்று 8 புள்ளிகள் எடுத்து இருக்கிறது. நியூசிலாந்து அணியும் எட்டு போட்டிகளில் நான்கை வென்று எட்டு புள்ளிகள் எடுத்து இருக்கிறது. இந்த அணிகள் தங்களின் கடைசி ஆட்டத்தில் விளையாடி அதிலிருந்து கிடைக்கின்ற முடிவுகள் படி, ஒரு அணி அரை இறுதிக்கு தகுதி பெறும். ஒருவேளை இந்த இரு அணிகளும் தோற்று, ஆப்கானிஸ்தான அணி ஒரு போட்டியை வென்றால் அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.