நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று அமெரிக்கா டல்லாஸ் மைதானத்தில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணிக்கு துவக்க ஆட்டக்காரர் பதும் நிசாங்கா மிகச் சிறப்பான துவக்கத்தை தனித்து நின்று கொடுத்தார். அவர் 28 பந்துகளில் ஏழு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 47 ரன்கள் எடுத்தார்.
இவர் வெளியேறியதும் இலங்கை அணிக்கு பெரிய ரன் பங்களிப்புகள் வரவில்லை. தனஞ்செய டி சில்வா 26 பந்தில் 21 ரன், ஆஞ்சலோ மேத்யூஸ் 19 பந்தில் 16 ரன் எடுத்தார்கள். இலங்கை அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது. பங்களாதேஷ் தரப்பில் முஸ்தஃபிசூர் மற்றும் ரிசாத் ஹோசைன் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பங்களாதேஷ் அணிக்கு லிட்டன் தாஸ் 38 பந்தில் 36 ரன், தவ்ஹீத் ஹ்ரிடாய் அதிரடியாக 20 பந்தில் 40 ரன் எடுக்க போட்டி பங்களாதேஷ் பக்கம் வந்தது. இந்த நிலையில் கடைசி கட்டத்தில் இரண்டு விக்கெட் கைவசம் இருக்க, இரண்டு ஓவர்களுக்கு வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது.
இதன் காரணமாக போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. சனகா வீசிய 19ஆவது ஓவரில் அனுபவ வீரர் மகமதுல்லா வெற்றிக்குத் தேவையான ரன்களை எடுத்து பரபரப்பை முடித்து வைத்தார். பங்களாதேஷ் அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பந்துவீச்சில் இலங்கை தரப்பில் ஹசரங்கா 2 மற்றும் துஷாரா நான்கு விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதையும் படிங்க : 75 ரன்னில் நியூசிலாந்தை சுருட்டிய ஆப்கானிஸ்தான்.. ரஷித் கான் வரலாற்று சாதனை.. 9 பேர் ஒற்றை இலக்கம்
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு அதிக விக்கெட் கைப்பற்றியவராக 107 விக்கெட் கைப்பற்றி லஸித் மலிங்கா இருந்தார். இன்றைய போட்டியில் இரண்டு விக்கெட் கைப்பற்றியதின் மூலம் ஹசரங்கா மலிங்கா சாதனையை முறியடித்து 108 விக்கெட்டுகள் கைப்பற்றி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளராக மாறினார்