2023 உலக கோப்பை விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் கிடையாது இவர்தான்; சாம்சனுக்கு வாய்ப்பு எப்படி இருக்கு – இந்திய முன்னாள் வீரர்கள் கருத்து!

0
1435
Samson

இந்த ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் முதல் முறையாக முழுமையாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட இருக்கிறது!

கடந்த முறை இங்கிலாந்தில் 2019 ஆம் வருடம் நடந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு பேட்டிங்கில் நான்காம் இடத்தில் விளையாடுவதற்கு சரியான வீரர் இல்லாதது போல தற்போதும் அதே நிலை நீடிக்கிறது.

- Advertisement -

கடந்த முறை அம்பதி ராயுடு அந்த இடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு திடீரென்று அவர் சரியாக செயல்படாமல் போக, அவரை நீக்கிவிட்டு விஜய் சங்கரை உள்ளே கொண்டு வந்தது தற்போது வரை மிகப் பெரிய சர்ச்சையான விஷயமாக இருக்கிறது.

அதேபோல தற்பொழுது காயம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் விலகி இருப்பதால், அவருடைய இடத்திற்கு யாரைக் கொண்டு வருவது என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த இடத்திற்கு சூரியகுமார் யாதவ் மற்றும் இரண்டாவது விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் இருவரும் இருக்கிறார்கள்.

இந்திய அணிக்கு இந்த உலகக் கோப்பையில் உடல் தகுதியுடன் கே எல் ராகுல் இருந்தால் அவர்தான் முதல் விக்கெட் கீப்பராக இருப்பார். மேலும் இந்திய அணிக்கு இரண்டாவது விக்கெட் கீப்பர் மற்றும் நான்காவது இடத்திற்கான மாற்று வீரர் என இரண்டு இடங்களுக்கும் சேர்த்து சூரியகுமார் யாதவ், இஷான் கிஷான் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் போட்டியில் இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர்
“2023 உலகக் கோப்பை திட்டத்தில் சஞ்சு சாம்சன் பொருந்தி வருகிறார் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் ராகுல் உடல் தகுதியுடன் இருந்தால் அவர்தான் முதல் விக்கெட் கீப்பராக இருப்பார். இரண்டாவது விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சங் வரலாம். அதே சமயத்தில் மாற்று துவக்க ஆட்டக்காரர் மற்றும் இரண்டாவது விக்கெட் கீப்பர் இடத்தில் இசான் கிஷானும் இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. அப்படி நடக்கும் பட்சத்தில் சஞ்சு சாம்சன் இடத்தை இழப்பார்.

எனவே வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடக்கும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் சாம்சன் சிறப்பாக செயல்பட வேண்டியது மிகவும்அவசியமான ஒன்று. சஞ்சு சாம்சனுக்கு பேட்டிங்கில் நிலைத்தன்மையில் கொஞ்சம் பிரச்சனை இருக்கிறது. ஆனால் இப்படி இல்லாமல் அவர் பொறுப்பை எடுத்துக் கொண்டு விளையாடினால், அவர் உறுதியாக இரண்டாவது விக்கெட் கீப்பராக முடியும். இதற்கு வெஸ்ட் இண்டீஸ் தொடர் மிகவும் முக்கியம்!” என்று கூறியிருக்கிறார்!

இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ” இஷான் கிஷான் உலகக் கோப்பை திட்டத்தில் இருந்தால் அவரை இப்பொழுதே நான்காவது இடத்தில் விளையாட வைக்க வேண்டும். சஞ்சு சம்சனுக்கு பேட்டிங்கில் நிலைத்தன்மை இல்லை என்பதுதான் தற்போது விவாதமாக இருக்கிறது. அவர் உங்களது திட்டத்தில் இருந்தால் அவரை நான்காவது இடத்தில் விளையாட வையுங்கள். அவர் அந்த இடத்தில் ரன்கள் எடுத்தால் நிச்சயமாக அவர்தான் உலக கோப்பையில் நான்காவது இடத்திலோ அல்லது இரண்டாவது விக்கெட் கீப்பராகவோ இருப்பார்!” என்று கூறியிருக்கிறார்!