2022 டி20 உலகக்கோப்பையில் முதல் சதம் ; பங்களாதேஷ் பரிதாபம்; தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!

0
2481
T20iwc2022

தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது டி20 உலகக்கோப்பை தொடரில் குரூப் 2ல் இருந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகள் சிட்னி மைதானத்தில் இன்று பலப்பரீட்சை நடத்தின. தென்ஆப்பிரிக்கா அணி தனது முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணியுடன் விளையாடியது. இந்த போட்டி மழையால் யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் முடிந்ததால் தென் ஆப்பிரிக்க அணிக்கு கடுமையான நெருக்கடி உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டிக்கான டாசில் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா வந்த வேகத்தில் வெளியேறினார். அடுத்து இடது கை ஆட்டக்காரர்கள் குயின்டன் டி காக் மற்றும் ரைலி ரூஸோவ் இருவரும் இணைந்து ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்தார்கள்.

குயின்டன் டி காக் 38 பந்துகளில் 63 ரன்களை 7 பவுண்டரி மற்றும் 3 சிக்சருடன் எடுத்து ஆட்டமிழந்தார். இன்னொரு முனையில் பேயாட்டம் ஆடிய ரூஸோவ் 56 பந்துகளில் 109 ரன்களை 7 பவுண்டரி மற்றும் 8 சிக்சருடன் நொறுக்கி தள்ளினார். இந்த உலகக்கோப்பை தொடரில் இது முதல் சதம் ஆகும். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய பங்களாதேஷ் அணிக்கு அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 31 பந்துகளில் 36 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன் ஆகும். 16.3 ஓவர்களில் பங்களாதேஷ் அணி 201 ரன்களுக்கு சுருண்டது. இதனால் 104 ரன்கள் என்ற மிகப் பெரிய வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வென்று அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை பிரகாசமாக்கி உள்ளது. அடுத்து பாகிஸ்தான் அணியுடன் மோதும் போட்டியில் தென்னாபிரிக்க அணி வென்றால் அரையிறுதி வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்துவிடும்.

எட்டாவது டி20 உலக கோப்பை தொடரில் இன்று இதே மைதானத்தில் இந்திய அணி நெதர்லாந்து அணியைச் சந்தித்து விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது. சிறிய அணிகள் பெரிய தாக்கத்தை உருவாக்கி வரும் இந்த தொடரில் இந்த நெதர்லாந்து அணியை இந்திய அணி எச்சரிக்கையாக எதிர்கொள்ள வேண்டியது முக்கியம்.