2022 டி20 உலக கோப்பை அதிரடி இங்கிலாந்து பேட்ஸ்மேன் திடீரென ஓய்வு அறிவிப்பு!

0
567
England

2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட டி20 உலகக் கோப்பையை ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி கைப்பற்றி அசத்தியது. இந்த அணியில் இடம் பெற்றதோடு விளையாடும் அணியிலும் இடம் பெற்ற 34 வயதான அதிரடி பேட்ஸ்மேன் ஒருவர் தற்பொழுது திடீரென ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார்!

2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் பங்களாதேஷ் அணியுடனும் தோற்று இங்கிலாந்து அணி முதல் சுற்றோடு வெளியேறி அதிர்ச்சி அளித்தது. இது இங்கிலீஷ் கிரிக்கெட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியது.

- Advertisement -

இதற்கு அடுத்து 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்காக புதியதொரு இங்கிலாந்து அணியை உருவாக்கும் முயற்சியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் எடுத்தது. அப்பொழுது இங்கிலாந்து வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிக்கு துவக்க ஆட்டக்காரராக கிடைத்தவர் தான் அலெக்ஸ் ஹேலஸ். தற்போது இவர்தான் திடீரென ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார்.

அந்த 2019 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை நெருங்கிக் கொண்டிருக்கும் பொழுது, திடீரென இவர் போதை மருந்து பயன்படுத்திய பிரச்சனையில் சிக்கி அணியை விட்டு வெளியேற்றப்பட்டார். அதற்குப் பிறகு இயான் மோர்கன் கேப்டனாக இருக்கும் வரை, இவருக்கு இங்கிலாந்து அணியில் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. காரணம் இவர் அணிக்கும் தமக்கும் செய்தது மிகப்பெரிய துரோகம் என்று கேப்டன் இயான் மோர்கன் கடைசி வரை கருதினார்.

இதற்கு அடுத்து இயான் மோர்கன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற அடுத்து ஜாஸ் பட்லர் தலைமையிலான அணியில் அலெக்ஸ் ஹேலசுக்கு இடம் கிடைத்தது. மேலும் அவர் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலக கோப்பை இங்கிலாந்து அணியில் இடம் பெற்று, மேலும் இங்கிலாந்து அணிக்காக தொடர்ச்சியாக விளையாடும் வாய்ப்பையும் அந்தத் தொடரில் பெற்றார்.

- Advertisement -

அந்தத் தொடரின் அரை இறுதியில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 47 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் உடன், அவர் ஆட்டம் இழக்காமல் அடித்த 86 ரண்களை இங்கிலாந்து ரசிகர்கள் மட்டுமல்ல இந்திய ரசிகர்களும் மறக்க மாட்டார்கள்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அலெக்ஸ் ஹேலஸ் இங்கிலாந்து அணிக்காக டி20 கிரிக்கெட்டில் 2011ம் ஆண்டு அறிமுகமானார். இவர் இதுவரை இங்கிலாந்து அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் 70 போட்டிகளில் 67 இன்னிங்ஸ்களில் 2419 ரன்களை 6 சதங்களுடன் அடித்திருக்கிறார். மேலும் 11 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 75 டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக விளையாடி உள்ள இவர் ஒரு டி20 சர்வதேச சதமும் அடித்திருக்கிறார்.

இங்கிலாந்து அணிக்காக தொடர்ச்சியாக சர்வதேச போட்டிகளில் விளையாடி பெரிய இடத்திற்கு வந்திருக்க வேண்டிய இவர், போதை மருந்து பயன்படுத்தியதாக 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியில் இருந்து விலக்கப்பட, ஒட்டுமொத்தமாக இவரது கிரிக்கெட் வாழ்க்கையே பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் கூட தற்பொழுது உலகம் முழுவதும் நடைபெறும் டி20 தொடர்களில் நல்ல விலைக்கு விளையாடி வருகிறார்!