டி20 ஆண்கள் கிரிக்கெட் 2005 ஆம் ஆண்டு முதல் முறையாக நியூசிலாந்தின் ஆக்லாந்து மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டி20 தொடர் அதுதான். அங்கிருந்து டி20 கிரிக்கெட் வளர்ச்சியடைந்த விதம் இன்று யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு இருக்கிறது.
உதாரணமாக ஆரம்ப காலக்கட்டத்தில் சம்பிரதாயத்திற்கு ஒரே போட்டி கொண்ட டி20 தொடர் கூட சில நாடுகளுக்கு இடையே நடைபெறும். ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டது.
ஆனால் இன்று நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறி இருக்கிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை குறைத்துக் கொண்டு, ஐந்து முதல் ஏழு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட அணிகள் ஆர்வம் காட்டுகின்றன.
தற்பொழுது வெஸ்ட் இண்டிஸ் நாட்டிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்த இங்கிலாந்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடியது. இந்தத் தொடரை இரண்டுக்கு மூன்று என நேற்று இங்கிலாந்து இழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொடரில் இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் பில் சால்ட் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் இந்தத் தொடரில் 40, 25, 109*, 119, 38 என அதிரடியாக ரன்கள் குவித்திருக்கிறார்.
இந்த தொடரில் இவர் ஒட்டுமொத்தமாக இரண்டு சதங்கள் மற்றும் இரண்டு 30 ரன்கள் மேற்பட்டு எடுத்து 331 ரன்கள் குவித்திருக்கிறார். இரு நாடுகளுக்கு இடையேயான டி20 தொடர்களில், ஒரு தனிப்பட்ட பேட்ஸ்மேன் குவித்த அதிகபட்ச ரன்கள் இதுவாகும். இந்த வகையில் சர்வதேச ஆண்கள் டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனையை படைத்திருக்கிறார்.
பில் சால்ட் – 5 போட்டிகள் – வெஸ்ட் இண்டீஸ் – 331 ரன்கள்
முகமது ரிஸ்வான் – 6 போட்டிகள் – இங்கிலாந்து -316 ரன்கள்
மார்க் சாப்மேன் – 5 போட்டிகள் – பாகிஸ்தான் – 290 ரன்கள்
பாபர் அசாம் – 7 போட்டிகள் – இங்கிலாந்து – 285 ரன்கள்