14,000 சர்வதேச ரன்கள் குவித்த பங்களாதேஷ் நட்சத்திர வீரர் திடீர் ஓய்வு; பத்திரிக்கையாளர் சந்திப்பில் கண்ணீர்!

0
809
Tamim

தற்போது கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பவர்களில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்திருக்கக் கூடியவராக விராட் கோலி ரோஹித் சர்மாவிற்கு அடுத்த இடத்தில் பங்களாதேஷ் அணியின் தற்போதைய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த தமீம் இக்பால் இருக்கிறார்!

சற்று நேரத்திற்கு முன்பாக அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென்று பத்திரிகையாளர்களை அழைத்து தெரிவித்திருக்கிறார். இந்தச் சந்திப்பின்போது அவர் உடைந்து கண்ணீர் மல்க பேசியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இன்னும் மூன்று மாத காலத்தில் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை இருக்கும்பொழுது, பங்களாதேஷ் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் தமிம் இக்பால் மொத்தமாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது என்று அறிவித்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கி இருக்கிறது.

தமீம் இக்பால் தமது டீன் ஏஜ் வயதிலேயே சர்வதேச கிரிக்கெட் விளையாட பங்களாதேஷ் நாட்டுக்காக அறிமுகமானார். 2007 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான பங்களாதேஷ் அணியின் சிறப்பு வாய்ந்த வெற்றியில் அரை சதம் அடித்து முக்கிய பங்காற்றி இருந்தார். கடந்த வருடத்தில் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

தமீம் இக்பால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 சதங்களுடன் 5314 ரன்களும், ஒருநாள் கிரிக்கெட்டில் 14 சதங்கள் உடன் 8313 ரன்களும், டி20 கிரிக்கெட்டில் ஒரு சதம் உட்பட 1100 ரன்களும் குவித்திருக்கிறார். மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சதம் அடித்திருக்கும் பங்களாதேஷ் வீரரான இவர், மொத்தமாக அதிகபட்சமாக 25 சர்வதேச சதங்கள் அடித்திருக்கிறார்.

- Advertisement -

ஓய்வு முடிவை அறிவித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் கண்ணீர் மல்க பேசிய தமீம் இக்பால் “இதுவே கிரிக்கெட்டில் எனக்கு முடிவு. நான் எனது சிறந்ததை வழங்கினேன். நான் எனது சிறந்ததை வழங்க அதிகபட்சம் முயற்சி செய்தேன். இந்தத் தருணத்தில் இருந்து நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுக் கொள்கிறேன். எனது அணியினர், பயிற்சியாளர்கள், பங்களாதேஷ் கிரிக்கெட் நிர்வாக அதிகாரிகள், என்னுடைய குடும்பத்தினர் மற்றும் என்னுடைய நீண்ட கிரிக்கெட் பயணத்தில் உடன் இருந்தவர்கள் அனைவருக்கும், என் மீது கொண்ட நம்பிக்கைக்காக நன்றி தெரிவிக்கிறேன்.

ரசிகர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அன்பும் என் மீதான என் நம்பிக்கையும் பங்களாதேஷுக்கு எனது மிகச் சிறந்ததை கொடுக்க தூண்டியது. என் வாழ்க்கையின் அடுத்த அத்தியாத்திற்காக உங்களின் பிரார்த்தனைகளை கேட்க விரும்புகிறேன். உங்களின் பிரார்த்தனையில் என்னையும் இணைத்துக் கொள்ளுங்கள்!” என்று உருக்கமாக கேட்டுக் கொண்டிருக்கிறார்!

மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் சொந்த நாட்டில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடி வரும் பங்களாதேஷ் அணி, இந்தத் தொடரின் முதல் போட்டியில் நேற்று தோல்வி அடைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.