131 வருட வரலாறு.. பாக்ஸிங் டே டெஸ்ட் என்ற பெயர் ஏன் வந்தது?.. அந்த டெஸ்டில் இந்தியாவின் சாதனை என்ன?.. முழு தகவல்கள்!

0
158
Australia

இந்திய அணி நாளை பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக அந்த நாட்டில் விளையாட இருக்கிறது. கிறிஸ்துமஸ் முடிந்த அடுத்தநாள் உடனே, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் கிரிக்கெட் மைதானத்திற்கு மாறுகின்ற சுவாரசியமான நிகழ்வு இதுவாகும்!

டிசம்பர் 26ஆம் தேதி துவங்கும் டெஸ்ட் போட்டிகள் பாக்ஸிங் டே டெஸ்ட் என்று அழைக்கப்படுகின்றன. இந்தக் குறிப்பிட்ட நாளில் நடைபெறும் போட்டிக்கு மட்டும் ஏன் இப்படியான ஒரு பெயர் வந்தது என்பது சுவாரசியமான வரலாறு.

- Advertisement -

இந்த பாக்சிங் டே என்பது இங்கிலாந்தில் இருந்து பரவியது. எனவே இங்கிலாந்து ஆட்சி செய்த நாடுகளிலும் இந்த முறை பெரும்பாலும் இருக்கிறது. குறிப்பாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, ட்ரினிடாட் டொபாக்கோ மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளில்.

கிறிஸ்மஸ் முடிந்த அடுத்த நாளில் முதலாளிகள் தங்களுடைய தொழிலாளிகளுக்கு தேர்ந்தெடுத்த சில பரிசு பொருட்களை பெட்டியில் வைத்து தருவார்கள். இதன் காரணமாகவே பெட்டிகளைக் குறிக்கும் விதமாக பாக்சிங் என்கின்ற பெயர் வந்தது. பாக்சிங் என்றால் இந்த இடத்தில் குத்துச்சண்டை என்கின்ற பொருள் கிடையாது.

அடுத்து இங்கிலாந்து தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் முன்னிட்டு ஏழைகளுக்கு கொடுப்பதற்கு என்று பரிசுப் பெட்டிகள் வைக்கப்படும். இந்த பரிசுப் பெட்டிகள் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் முடிந்து திறக்கப்படும். எனவே இதன் காரணமாகவும் கிறிஸ்துமஸ் முடிந்த அடுத்த நாள் பாக்ஸிங் டே என்று பெயர் பெற்றது.

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் 1892 ஆம் ஆண்டு செப்பர்ட் ஷீல்ட் கிரிக்கெட் தொடரில் முதல்முறையாக விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி இந்த தேதியில் நடந்தது. ஆனாலும் போட்டியின் ஒரு நாளாகவே டிசம்பர் 26ஆம் தேதி இடம் பெற்றது. இதுவே பின் நாட்களில் கிறிஸ்மஸ் காலத்தில் கிரிக்கெட் தொடர்களை ஆஸ்திரேலியா பாரம்பரியமாக நடத்துவதற்குகாரணமாக அமைந்தது.

இதற்குப் பிறகு 1952 ஆம் ஆண்டு ஆசஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே பாக்சிங் டே நாளில் நடத்தப்பட்டது. ஆனால் இந்தப் போட்டி டிசம்பர் 22ஆம் தேதி ஆரம்பித்து நடுவில் இரண்டு நாட்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்காக விடுமுறை விட்டு, பின்பு மீண்டும் டிசம்பர் 26ஆம் தேதி துவங்கும் விதமாக அமைக்கப்பட்டது.

முதல்முறையாக டிசம்பர் 26ஆம் தேதி அதாவது பாக்சிங் டே அன்று நடத்தப்பட்ட போட்டியாக ஆஸ்திரேலியாவில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 1968ஆம் ஆண்டு மோதிக்கொண்ட போட்டி அமைகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலியா மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகளை நடத்துவது வாடிக்கையாக வைத்திருக்கிறது. அன்றைய தினம் ஏதாவது ஒரு அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியை விளையாடும். இதேபோல் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளும் இந்த பழக்கத்தை வைத்திருக்கின்றன.

இந்தியா இந்த பாக்ஸிங் டே டெஸ்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 11 முறை விளையாடியிருக்கிறது. இதில் 2018 மற்றும் 2020 இரண்டு ஆண்டுகளில் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது. இதேபோல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பாக்சிங் டே டெஸ்டில் ஆறு முறை மோதி அதில் இரண்டு முறை வெற்றி பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!