“தோனி பும்ராவுக்கு 12கோடி.. ஸ்டார்க்குக்கு ஒரு பந்துக்கு 7.3லட்சம்” – கொதித்த சுரேஷ் ரெய்னா!

0
1014
Raina

அடுத்த வருடம் நடக்க இருக்கும் 17ஆவது ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் நேற்று நடைபெற்று முடிவுக்கு வந்திருக்கிறது. ஐபிஎல் மினி ஏலமானது முதல்முறையாக வெளிநாட்டிலும் ரசிகர்கள் முன்னிலையிலும் நடத்தப்பட்டு இருக்கிறது.

நேற்றைய ஏலத்தில் பெரிய அளவில் அதிருப்தியை உண்டாக்கிய விற்பனையாக ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா வீரர் மிட்சல் ஸ்டார்க் இருவரும் மிகப்பெரிய விலைக்குப் போனது அமைந்திருக்கிறது.

- Advertisement -

இதில் நீண்ட காலமாக மிச்சல் ஸ்டார்க் தங்கள் நாட்டிற்கு விளையாடுவதற்காக ஐபிஎல் விளையாட மாட்டேன் என்று இருந்தார். மொத்தமாகவே அவர் 26 ஐபிஎல் போட்டிகள் மட்டுமே விளையாடி இருக்கிறார். ஆனால் இவருக்கு இந்த ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் போட்டியிட்டு 24.75 கோடி கொடுத்திருக்கிறது.

இன்னொரு பக்கத்தில் ஐபிஎல் தொடரில் இரண்டு வருடங்களாக பங்கேற்காத பேட் கம்மின்ஸ், இந்த முறை மினி ஏலத்திற்கு வந்தார். கடந்த இரண்டு வருடங்கள் விளையாடாமல் இழந்த பணத்தையும் சேர்த்து ஒரே இடத்தில் பெற்றார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக ஏலத்தில் போட்டியிட்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இவருக்கு 20.50 கோடி கொடுத்து வாங்கியது.

இந்த அளவிற்கு இந்த இரண்டு வீரர்கள் மீதும் பணத்தைக் கொட்டி கொடுத்து வாங்கியது ரசிகர்களை தாண்டி இந்திய வீரர்களையும் சலிப்படைய வைத்திருக்கிறது. ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான செயல்பாட்டை பல வருடங்களாக வெளிப்படுத்தும் இந்திய ஜாம்பவான்கள் குறைந்த பணத்திற்கு விளையாடும் பொழுது, இவர்களுக்கு இப்படி கொட்டிக் கொடுப்பது நியாயமா? என்கின்ற கேள்வி எழுந்திருக்கிறது.

- Advertisement -

உதாரணமாக, மிட்சல் ஸ்டார்க் ஒரு ஆண்டு ஐபிஎல் ஊதியமாக அடுத்த வருடம் 24.75 கோடி பெறப் போகிறார். இவருக்கு 1.3 கோடி ரூபாய் கிடைக்கப் போகிறது. இவர் வீசும் ஒரு பந்துக்கு 7.3 லட்சம் கொடுக்கப் போகிறார்கள். இந்தப் புள்ளி விபரங்கள் மேலும் இந்திய ரசிகர்கள் மற்றும் இந்திய முன்னாள் வீரர்களைக் கோபம் அடைய வைக்கிறது.

இதுகுறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” மொத்தத் தொகை இருநூறு கோடியாக இருக்கும் பொழுது, அதில் 150 கோடி ரூபாய் இந்திய வீரர்களுக்கு செலவு செய்யப்பட வேண்டும். மீதம் இருக்கும் 50 கோடி ரூபாய் மட்டுமே வெளிநாட்டு வீரர்களுக்கு செலவு செய்யப்பட வேண்டும் என்பதாக விதி வரவேண்டும். இந்திய வீரர் விராட் கோலி ஏலத்திற்கு வந்தால், அவர் 42 கோடி ரூபாய்க்கு ஏலம் போவார்!” என்று கூறியிருக்கிறார்.

மேலும் இதுகுறித்து பேசி உள்ள சுரேஷ் ரெய்னா கூறும்பொழுது “ஐபிஎல் தொடரில் தோனி மற்றும் பும்ரா 12 கோடிக்கு விளையாடுகிறார்கள். முகமது சாமி விளையாடுவது வெறும் ஐந்து கோடிக்குதான். ஆனால் ஒட்டுமொத்தமாக 26 ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ள ஒரு வீரருக்கு 25 கோடி கொடுக்கிறார்கள். இது நிச்சயமாக சரியானது கிடையாது!” என்று கூறியிருக்கிறார்!