பேட்டிங்கில் 11 சிக்ஸர்.. 131 ரன்.. பவுலிங்கில் 4 விக்கெட்.. ரியான் பராக் ஐபிஎல் விமர்சனங்களுக்கு பதிலடி!

0
673
Riyan

இந்தியாவில் உள்நாட்டு கிரிக்கெட்டில் டெஸ்ட் வடிவத்திற்கு ரஞ்சி டெஸ்ட் தொடர் இருக்கிறது. மேலும் இதே டெஸ்ட் வடிவத்தில் ரஞ்சி டெஸ்ட் அணிகளை மண்டலங்களாக சுருக்கி துலிப் டிராபி நடத்தப்படுகிறது!

அதேபோல ஒருநாள் கிரிக்கெட் போட்டி வடிவத்திற்கு விஜய் ஹசாரே டிராபி நடத்தப்படுகிறது. மேலும் இந்த தொடரில் இருக்கும் அணிகளை மண்டலங்களாக சுருக்கி இதே ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் தியோதர் டிராபி நடத்தப்படுகிறது!

- Advertisement -

இந்த தியோதர் டிராபி 1973 – 74ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வருகிறது.
மத்திய மண்டலம், கிழக்கு மண்டலம், வடக்கு மண்டலம், வடகிழக்கு மண்டலம், தெற்கு மண்டலம் மற்றும் மேற்கு மண்டலம் என ஆறு அணிகள் பங்கேற்கின்றன. தமிழ்நாட்டு வீரர்கள் தெற்கு மண்டல அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

நடைபெற்று வரும் தியோதர் டிராபியில் இன்று சௌரப் திவாரி தலைமையிலான கிழக்கு மண்டலமும், நிதிஷ் ராணா தலைமையிலான வடக்கு மண்டலமும் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கிழக்கு மண்டலம் பேட்டிங் தேர்வு செய்தது.

பேட்டிங்கை தேர்வு செய்தபடி பொறுப்பாக விளையாடாத காரணத்தினால் 57 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை கிழக்கு மண்டலம் இழந்துவிட்டது. இதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த ரியான் பராக் மற்றும் குமார் குஷ்கரா இருவரும் படிப்படியாக விளையாடி அணியை மீட்க ஆரம்பித்தார்கள்.

- Advertisement -

ஒரு கட்டத்தில் ரியான் பராக் ஆட்டத்தில் அனல் பறக்க ஆரம்பித்தது. அவரது பேட்டில் பட்ட பந்துகள் சிக்ஸர்களாக தெறித்தன. மிகச் சிறப்பாக விளையாடிய அவர் 84 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இறுதியாக அவர் 102 பந்துகளில் ஐந்து பவுண்டரி மற்றும் 11 சிக்ஸர்கள் மூலம் 131 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

ரியான் பராக் உடன் இணைந்து விளையாடிய குமார் குஷ்கரா சிறப்பாக விளையாடி 87 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 98 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 235 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது. இறுதியில் கிழக்கு மண்டலம் 50 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 338 ரன்கள் சேர்த்தது. மயங்க் யாதவ் வடக்கு மண்டலம் சார்பில் நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

பெரிய இலக்கை நோக்கி விளையாடிய வடக்கு மண்டல அணிக்கு கடந்த ஆட்டத்தில் சதம் அடித்த பிரப்சிம்ரன் சிங் ஏமாற்றம் அளித்தார். அபிஷேக் ஷர்மா 44, ஹிம்மன்சு ராணா 40, மந்திப் சிங் 50, சுபம் ரோகிலா 41 ரன்கள் எடுத்தார்கள். ஆனால் இது வெற்றிக்கு போதுமானதாக அமையவில்லை. வடக்கு மண்டலம் 45.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 249 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து கிழக்கு மண்டலம் 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் கலக்கிய ரியான் பராக் பந்துவீச்சில் நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.

ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய விமர்சனங்களை சந்தித்து வந்த ரியான் பராக், தற்போதைய சிறப்பான செயல்பாட்டின் மூலம் அதற்கு ஓரளவு பதில் அளித்து இருக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அவர் இன்னும் ஒரு ஆல் ரவுண்டராக அதிக தூரம் செல்ல வேண்டியது இருக்கிறது!